sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 18

/

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 18

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 18

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 18


ADDED : பிப் 20, 2025 11:03 AM

Google News

ADDED : பிப் 20, 2025 11:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதன்லால் திங்கரா

நீதிமன்றத்தில் மதன்லால் அளித்த விளக்கம் இதுதான். ''விடுதலை கோரி உங்களிடம் பிச்சை கேட்க விரும்பவில்லை. ஏனென்றால் நான் என்னதான் வாதாடினாலும் இந்த நீதிமன்றம் என்ன தண்டனை வழங்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் என் செயலின் நியாயத்தை இந்த உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்.

எங்கள் நாட்டை நீங்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது அடாத செயல். இதே உங்கள் நாட்டை ஜெர்மானியர் ஆக்கிரமிப்பு செய்தால் உங்களால் பொறுக்க முடியுமா? அதே உணர்வுதான் தேசபக்தி கொண்ட இந்தியனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல லட்சம் இந்தியர்களைக் கொன்று குவித்தீர்களே, உங்களுக்கு எந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்து தண்டனை வழங்குவது? இதில் பாரபட்சம் இல்லாமல் ஆண்களோடு, பெண்களையும், குழந்தைகளையும் சேர்த்தே அழித்தீர்களே, இந்த அதர்மத்துக்கு எப்படி நீதி செய்வது? அது மட்டுமா... ஒவ்வொரு ஆண்டும் லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய சொத்துகளை உங்கள் நாட்டிற்குக் கடத்திக் கொண்டு வந்திருக்கிறீர்களே,

இந்தக் கொள்ளைக்கு நீங்கள் என்ன சமாதானம் சொல்லப் போகிறீர்கள்? எங்கள் புனித பூமியை ரத்த பூமியாக மாற்ற உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? ஆக்கிரமிப்பவன் பலவான் என்பதால், எளியவர்களின் உயிர்கள் எல்லாம் கிள்ளுக் கீரைகளாகிப் போய் விட்டனவா? தேசபக்தி மிகுந்த எங்கள் இளைஞர்கள் எத்தனை பேரைத் துாக்கிலிட்டுக் கொன்றீர்கள்? எத்தனை பேரை நாடு கடத்தி, சிறையிலிட்டுக் கொடுமை படுத்தினீர்கள்? அந்த அக்கிரமங்களுக்கு பதிலாக, என்னாலான சிறு பழிவாங்கல்தான், நான் செய்த இந்தக் கொலை.

''இந்த உள்ளுணர்வின் துாண்டுதலால்தான் கர்சன் வில்லியைக் கொன்றேன். அதாவது மனசாட்சி வழிகாட்டியபடிதான் நடந்து கொண்டேன். வேறு யாரும் என்னை வழிநடத்தவில்லை. என் கடமையாகக் கருதிதான் இச்செயலைப் புரிந்தேன். எந்த சதியாலோசனையிலும் ஈடுபடவில்லை. எல்லாம் என் சொந்த எண்ணம், செயல்தான். என் தேசம் அந்நிய நாட்டின் மீது படையெடுக்கவில்லை; ஆனால் துரதிருஷ்டவசமாகத் தன் சொந்த நாட்டிலேயே சுதந்திரத்துக்காகப் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் நாங்கள் நிராயுதபாணிகளாக இருப்பதுதான் வேதனை.

ஆகவே அவர்களுடைய செயல்களை உங்களுக்கு எதிரான யுத்தம் என எப்படி சொல்ல முடியும்? அதெல்லாம் வெறும் தற்காப்புதான். இனியும் இதைப் போர் முயற்சி, புரட்சி நடவடிக்கை என நீங்கள் கருதினால், நீங்கள் எங்கள் நாட்டை விட்டு வெளியேறும்வரை அது தொடரும். என் நாட்டிற்குப் பலவகையில் பாதகம் புரிந்த ஒருவனை அவன் நாட்டிற்கே வந்து கொலை செய்தேன். என் தேசம் இழந்த எத்தனையோ உயிர்களுக்கு இது சரியான ஈடு இல்லைதான் என்பதையும் நான் தைரியமாகப் பதிவிடுகிறேன்.

''என் நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி, அவமானம், அதர்மம், அக்கிரமம் எல்லாம் என் பாரதமாதாவுக்கு இழைக்கப்பட்டதாகவே கருதுகிறேன். ஆகவேதான் என்னால் முடிந்தவரை சிறு அளவில் அந்தக் கறையை நீக்கினேன். அதேநேரம் என் உயிர் சட்ட ரீதியாகப் பறிக்கப்படும் என்பதை பூரணமாக உணர்ந்திருக்கிறேன். பாரதத் தாய்க்கு காணிக்கையாக உயிரை சமர்ப்பிக்கிறேன்.

''என் மீது கருணை காட்டும்படி யாசிக்கவில்லை. ஏனெனில் இது பிரிட்டன், இந்தியாவுக்கு இடையிலான போர் அல்ல, ஆங்கிலேயர், ஹிந்துக்களுக்கு இடையிலான போர். மனித குலத்திலேயே ஒரு இனம், இன்னொரு இனத்தோடு போரிடும் வேதனையான, வித்தியாசமான போர் இது''

நீதிமன்றத்தில் மதன்லால் திங்கராவின் உறுதியான இந்த கர்ஜனையைக் கேட்டு அனைவரும் பிரமித்துப் போனார்கள்.

ஆங்கிலேயக் கவிஞரான வில்ப்ரைட் ஸ்காவென், ''இப்படி துணிச்சலான ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. தனக்கு எதிரான தீர்ப்புக்கு சிறிதும் அச்சமின்றி பதிலைப் பதிவு செய்து, தன் செய்கைக்கு நியாயம் கற்பித்திருக்கிறார். இவரைப் போல 500 இளைஞர்கள் இந்தியாவில் உருவானார்கள் என்றால் நாடு விரைவில் விடுதலை பெறும்'' என மதன்லால் மீதான தன் மரியாதையை வெளிப்படுத்தினார். பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமராகப் பதவி ஏற்ற வின்ஸ்டன் சர்ச்சில், 'இதுவரை நான் கண்ட தேச பக்தர்களில் மதன்லால் திங்கரா மிகச் சிறந்தவராக எனக்குப்படுகிறார்' என வியந்துள்ளார்.

லாயிட்ஸ் ஜார்ஜ் என்பவர், 'புராண கதாநாயகரைப் போலத் திகழ்கிறார் மதன்லால். இவர் 2000 ஆண்டுகளானாலும் மக்களால் மறக்கப்படாதவராகவே விளங்குவார்'' என தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். விசாரணையின் போது நீதிமன்றத்திலேயே இருந்த மருத்துவர், 'மதன்லாலின் நாடித்துடிப்பு அவர் சிறையிலிருந்து மன்றத்துக்கு வரும் போது எப்படி நிதானமாக இருந்ததோ, அதே போல தன் விளக்க உரையை முடிக்கும்போதும் இருந்தது'' என வியப்பை வெளியிட்டிருக்கிறார்.

தீர்ப்பு எழுதப்பட்டு, குறிப்பிட்ட நாளில் மதன்லால் துாக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த நடவடிக்கையின் ஒரு சம்பிரதாயமாக கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், அவருக்காக பிரார்த்தனை மேற்கொள்ள முன்வந்தார். அவரைத் தடுத்து விட்டார் மதன்லால். ''நான் ஒரு ஹிந்து. எனக்காக பிரார்த்தனை செய்து உங்கள் நேரத்தை வீணடித்து கொள்ளாதீர்கள்'' எனக் கூறிவிட்டார். அதுமட்டுமல்ல, துாக்கு மேடையில் தனக்குத் துாக்குக் கயிற்றை மாட்ட வந்த பணியாளரிடம், 'சற்றுத் தள்ளி நில்லுங்கள், என் இறுதி விநாடியைத் தீர்மானிக்கும் இந்தக் கயிற்றை நானே என் கழுத்தில் அணிந்து கொள்கிறேன்' என மிகவும் திடமாக, தெளிவாகக் கூறினார்.

மதன்லாலின் இறுதி வார்த்தைகள் இவைதான்: ''அம்மா, பாரதத் தாயே, இந்தப் பிறவியில் நான் இப்போது இறக்கிறேன். ஆனால் அடுத்தப் பிறவியிலும் இந்தியாவிலேயே பிறக்க ஆசைப்படுகிறேன். ஏன் தெரியுமா? இந்தப் பிறவியில் சுவாசிக்க முடியாத சுதந்திரக் காற்றை அடுத்தப் பிறவியிலாவது மனம் நிறைய சுவாசிக்க வேண்டும் என்பதால்தான். ஆமாம், நிச்சயம் அதற்குள் அடிமைத் தளை தகர்த்தெறியப்பட்டிருக்கும். தாயே... உன்னை வணங்குகிறேன். வந்தே மாதரம்''

இதில் மிக வெட்கப்பட வேண்டிய வேதனை என்னவென்றால், மதன்லாலின் தந்தை, தான் கடைசிவரை ஆங்கிலேயர்களின் அடிவருடி என்பதை நிரூபித்ததுதான். ஆமாம், 'மதன்லாலை என் மகன் என சொல்ல வெட்கப்படுகிறேன். நான் போற்றிப் புகழும் பிரிட்டிஷ் மன்னருக்கு எதிராக அவன் செயல்பட்டதில் எனக்கு உடன்பாடே இல்லை. ஆகவே அவனுடைய சடலத்தை அமிர்தசரஸிற்கு அனுப்ப வேண்டாம், அங்கேயே புதைத்து விடுங்கள்'' என கொடூரமாகக் கேட்டுக் கொண்டார் அவர்.

அவ்வாறே 1909, ஆக.17ல் அவரது 25வது வயதில், மதன்லால் உடல் லண்டன் சிறையில் புதைக்கப்பட்டது. பின் 1976, டிச.13 அன்று அவர் உடல் மகாராஷ்டிர மாநிலம் அகோலா என்ற இடத்தில் சமாதியாக எழுப்பப்பட்டது.

அடுத்தப் பிறவியிலும் இந்தியாவிலேயே பிறக்க வேண்டும் என்ற மதன்லாலின் இந்த இறுதிச் சொற்கள் இப்போது நம்முள் ஒரு பேருண்மையை எடுத்துச் சொல்கிறது. ஆமாம், இப்போது விடுதலை பெற்ற இந்தியாவின் சுதந்திர மணத்தை நுகர்கிறோமே, நம்மில் எத்தனை லட்சம் பேர் மதன்லால் போலவே முற்பிறவியில், இந்திய சுதந்திரத்துக்காகப் போராடி மரணமடைந்தோமோ... அதன் பயனாகத்தான் இப்பிறவியில் சுதந்திர சந்தோஷத்தை அனுபவிக்கிறோம்.

- அடுத்த வாரம்: 'ஜெய்ஹிந்த்' செண்பகராமன்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us