ADDED : மார் 17, 2017 01:57 PM

தல வரலாறு: ராமபிரானின் பாட்டனார்களில் ஒருவரான சகரன் அயோத்தியை ஆண்ட போது, இந்திர பதவியைப் பிடிப்பதற்காக அஸ்வமேத யாகம் செய்தார். யாகத்தின் போது, நாடுகளைப் பிடிக்க அனுப்பப்பட்ட குதிரை காணாமல் போய் விட்டது. சகரன் தனது மகன்களை அனுப்பி குதிரையைத் தேட உத்தரவிட்டான். அது பாதாளத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷி அருகில் நின்றது. அதை ரிஷி தான் பிடித்து வைத்திருக்கிறார் என தவறாகக் கருதிய சகரனின் பிள்ளைகள் அவரது தவத்தைக் கலைத்தனர். அவர் கண்விழிக்கவும் சகரனின் பிள்ளைகள் எரிந்து விட்டனர். அத்துடன் சாதுவை தொல்லை செய்த சகரனின் வம்சத்திற்கு சாபமும் ஏற்பட்டது. இந்த சாபம் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தது.
வசிஷ்டரின் ஆலோசனைப்படி, சகரனின் குலத்தில் வந்த பகீரதன், கங்கை நதியை பூமிக்கு கொண்டு வந்து சாபவிமோசனம் தேடிக்கொண்டான்.
தனது கோபத்தால் சகரனின் தலைமுறை பாதிக்கப்பட்டதை எண்ணி வருந்திய கபில முனிவரும், அதற்கு பிராயச்சித்தம் கிடைக்க சிவபூஜை செய்தார்.
சாண் உயரமும், மூன்று விரற்கிடை (மூன்று விரல்களைச் சேர்த்தல்) அளவும் உள்ள லிங்கத்தை இடது கையில் வைத்து, மலர் தூவி வழிபட்டார்.
அவருக்கு காட்சி தந்த சிவன், கையில் சிவலிங்கம் வைத்து வழிபடுவது ஆகம முறைப்படி சரியல்ல,” எனச் சொல்லி அவரை பசுவாகப் பிறக்கச் செய்து விட்டார்.
பசுவாக மாறிய பின்பு, தான் வடித்த சிறிய சிவலிங்கத்தை தரையில் வைத்து வழிபட்டு முக்திபெற்றார்.
பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர், இந்த லிங்கம் இருந்த இடத்தில் கோவில் எழுப்பினார். பசு வடிவில் கபிலர் வழிபட்ட தலமென்பதால் சுவாமிக்கு, 'தேனுபுரீஸ்வரர்' என பெயர் வந்தது. 'தேனு' என்றால் 'பசு'. பின் தேனுகாம்பாள் சன்னிதி அமைக்கப்பட்டது.
சிறப்பம்சம்: பிரகாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜர், கபிலநாதர், இரட்டை விநாயகர், முருகன் சன்னிதிகள் உள்ளன.
இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் புதன் விசேஷ கிரகமாக வழிபடப்படுகிறார்.
கல்வியில் பின்தங்கியவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவருக்கு பாசிப்பயறு படைத்து, துளசி அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
பயம், கோபம் நீங்க வடுக பைரவருக்கு திராட்சை மாலை அணிவித்தும், நெய் விளக்கேற்றியும் வழிபடுகிறார்கள். மூலவர் சன்னிதிக்கு மேல், யானையின் பின்பக்க அமைப்பைப் போன்ற கஜபிருஷ்ட விமானம் உள்ளது. மூலஸ்தானத்தில் சுவாமி சதுர பீடத்தில் காட்சி தருகிறார். லிங்கத்தைச் சுற்றி நாகாபரணம் அணிவித்துள்ளனர்.
வீடு கட்ட வழிபாடு: சிவன் சன்னிதி எதிரிலுள்ள நந்திக்கு மேலுள்ள சுவரில் அஷ்டதிக் பாலகர்கள் (எட்டு திசை காவலர்கள்) வாகனத்தில் அமர்ந்து காட்சி தருகின்றனர். வீடு கட்டும் பணிகள் தடையின்றி நடக்க இவர்களை வணங்குகின்றனர். முன் மண்டபத்திலுள்ள தூணில் கபிலர், கையில் லிங்க பூஜை செய்த சிற்பம் இருக்கிறது. சுவாமி சன்னிதி கோஷ்டத்திலுள்ள (சுற்றுச்சுவர்) தட்சிணாமூர்த்தி, ஆலமரம் இல்லாமல் உள்ளார் துர்க்கையின் கையில்
கிளி இருக்கிறது.
சிற்ப சிறப்பு: ஞாயிறு ராகுகாலத்தில் (மாலை 4.30 - 6:00 மணி) ஒரு தூணிலுள்ள சரபேஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அப்போது உற்சவர் புறப்பாடு உண்டு. கையில் வீணையுடன் விநாயகர், கையில் சேவலுடன் யானை மீது அமர்ந்த முருகன், மடியில் சீதையை அமர்த்தியிருக்கும் ராமனின் பாதத்தை தொட்டு வணங்கும் ஆஞ்சநேயர், ஐந்து முகங்களுடன் பிரம்மா ஆகிய சிற்பங்கள் விசேஷமானவை.
பிரகாரத்திலுள்ள கபிலநாதர், அன்னபூர்ணா சன்னிதிகளில் ஏப்.21, 22, 23 காலை 6:45 - 7:45 மணிக்குள் சூரிய ஒளி படுகிறது. இதை பாஸ்கர பூஜை என்பர்.
திருவிழா: பங்குனி உத்திரத்தில் தெப்பத்திருவிழா. சித்திரையில் பிரம்மோற்ஸவம், சித்ரா பவுர்ணமிஅன்று சரபேஸ்வரர் ஜெயந்தி.
இருப்பிடம்: தாம்பரம் - வேளச்சேரி சாலையில் 5 கி.மீ., தூரத்தில் ராஜகீழ்பாக்கம். இங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ., தூரத்தில் மாடம்பாக்கம்.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8.30 மணி.
அலைபேசி: 98849 32192, 98412 10813, 93826 77442.

