
ஆந்திர மாநிலம் வேப்பஞ்சேரியில் மகாலட்சுமியை மடி மீது அமர வைத்த நிலையில் லட்சுமி நாராயணரை தரிசிக்க தவம் செய்திருக்க வேண்டும். இவரை தரிசித்தால் நல்ல மணவாழ்வு அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இங்குள்ள தசாவதார கிருஷ்ணர் சிலை சிறப்பு மிக்கது.
பலஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. அந்நியப் படையெடுப்பால் சிதிலமடையவே வழிபாடு மறைந்தது. மழையின்றி போனதால் இங்குள்ள மக்கள் வறுமையில் வாடினர். இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது ''வேப்பஞ்சேரியில் குடியிருக்கும் லட்சுமி நாராயணருக்கு பூஜை நடைபெறாததே பஞ்சம் வரக் காரணம். சுவாமிக்கு நித்ய பூஜை, அபிஷேகம், ஆராதனை குறைவின்றி நடந்தால் பூமி செழிக்கும். கால்நடைகள் பெருகும். குடும்பநலம் பெறும்'' என அசரீரி கேட்டது. இதன் பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு பூஜை நடத்தத் தொடங்கினர்.
கோயிலின் கொடிமரத்தை தாண்டியதும் அமைதி தவழும் முகத்துடன் துவார பாலகர்கள் ஜெயர், விஜயரைத் தரிசிக்கலாம். கோயில் விமானத்தில் கலியுக கண்ணன் இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஸ்ரீனிவாசப்பெருமாள் மூலவராக இருக்கிறார்.
இங்குள்ள தசாவதார குளத்தின் தீர்த்தம் இனிப்பாக உள்ளது. குளத்தின் நடுவே காளிங்க நர்த்தனமாடும் கிருஷ்ணர் சிற்பம் உள்ளது. குளத்தின் கரையில் 21 அடி உயர ஒரே கல்லால் ஆன தசாவதாரக் கிருஷ்ணர் சிலை உள்ளது. மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராம், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என்னும் மகாவிஷ்ணுவின் தசாவதாரமும் ஒரே சிலையில் வடிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் தென்புறத்தில் அஷ்டலட்சுமி சன்னதி உள்ளது.
மது அருந்துபவர்கள் இங்கு விளக்கேற்றி வழிபட்டால் மனம் திருந்தி வாழ்வர். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அன்று நடக்கும் ராகுகால பூஜையில் பங்கேற்றால் சுபவிஷயத்தில் குறுக்கிடும் தடைகள் விலகும்.
எப்படி செல்வது :
* சித்துாரில் இருந்து 15 கி.மீ.,
* திருப்பதியில் இருந்து 60 கி.மீ.,
* வேலுாரில் இருந்து 45 கி.மீ.,
விசேஷ நாள்: கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராமநவமி.
நேரம்: காலை 6:00 - இரவு 8:30 மணி
அருகிலுள்ள கோயில் : வேலுார் ஜலகண்டேஸ்வரர் 45 கி.மீ., (மரணபயம் தீர...)
நேரம்: காலை 6:30 - மதியம் 1:00 மணி ; மதியம் 3:00 - இரவு 8:30 மணி
தொடர்புக்கு: 98947 45768