
புதுக்கோட்டை சாந்தநாதர் கோயிலை தரிசித்தால் காசி, ராமேஸ்வரம் கோயில்களை ஒரே நாளில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது. குலோத்துங்க சோழீஸ்வரம் எனப் பெயர் பெற்ற இக்கோயில் பிற்காலத்தில் 'சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்' என மாறியது. இப்போது சாந்தநாத சுவாமி கோயில் எனப்படுகிறது.
கிழக்கு நோக்கியுள்ள இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தி உள்ளது. நான்கு வேதங்களுக்கும் தலைவியாக தெற்கு நோக்கியபடி அம்மன் இருப்பதால் 'வேதநாயகி' எனப்படுகிறாள். கல்விக் கடவுளான இவளை வியாழன் அன்று வழிபடுவது சிறப்பு.
காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, ராமேஸ்வரம் ராமநாதர் - பர்வதவர்த்தினிக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள பல்லவன் குளக்கரையில் அமாவாசையன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து தீபமேற்றினால் பிதுர் தோஷம், முன்வினை பாவம் தீரும். கோயிலை அடுத்துள்ள பல்லவன் குளம் காசியில் பாயும் கங்கை தீர்த்தமாக கருதப்படுகிறது.
துர்கை சன்னதியில் ராகு காலத்தில் விளக்கேற்றி குங்கும அர்ச்சனை செய்ய திருமணத்தடை நீங்கும். இங்குள்ள சர்க்கரை விநாயகருக்கு பக்தர்கள் தங்களின் கைகளால் சர்க்கரை அபிேஷகம் செய்ய கடன் பிரச்னை தீரும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு பூசணி தீபம் ஏற்ற கிரக தோஷம் நீங்கும். முருகன், சரபேஸ்வரர், பைரவர் சன்னதிகள் உள்ளன.
பல்லவன் குளக்கரையில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. 12 சனிக்கிழமைகளில் துளசி மாலை சாத்தினால் நினைத்தது நிறைவேறும். வடைமாலை சாத்தி வழிபடுவோருக்கு சனி தோஷம் விலகும்.
எப்படி செல்வது: புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
விசேஷ நாள்: ஆனி பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, மாசிமக தெப்பம்.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:30 - 8:30 மணி
தொடர்புக்கு: 99420 75863
அருகிலுள்ள கோயில்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் 22 கி.மீ., (திருமணம் நடக்க...)
நேரம்: காலை 6:30 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04374 - 269 407