sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

இறுதித் தேர்வில் வெற்றி பெற ஆரணவல்லியைத் தரிசியுங்க!

/

இறுதித் தேர்வில் வெற்றி பெற ஆரணவல்லியைத் தரிசியுங்க!

இறுதித் தேர்வில் வெற்றி பெற ஆரணவல்லியைத் தரிசியுங்க!

இறுதித் தேர்வில் வெற்றி பெற ஆரணவல்லியைத் தரிசியுங்க!


ADDED : பிப் 10, 2017 11:28 AM

Google News

ADDED : பிப் 10, 2017 11:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி இறுதித்தேர்வுகள் நெருங்கும் வேளையில், மாணவர்கள் சிறப்பான வெற்றி பெற, மதுரை திருவாதவூர் திருமறைநாதர் கோவிலுக்குச் சென்று, ஆரணவல்லி அம்பாளைத் தரிசித்து வரலாம். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் பிறந்த ஊர் இது.

தல வரலாறு: தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களையும், அசுரகுரு சுக்ராச்சாரியாரின் தாயாரையும் மகாவிஷ்ணு அழித்தார். இந்த தோஷம் நீங்க, ஒரு தடாகமாக மாறி, அதே வடிவில் சிவனை வழிபட்டார். சிவபெருமான் ஒரு தாமரையின் மத்தியில் வேதநாதம் ஒலிக்க எழுந்தருளி, அவரது பாவம் போக்கியருளினார். இதனால் இவர் 'வேதபுரீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். இதன் தமிழாக்கமே 'திருமறைநாதர்'.

யாக அம்பிகை: படைப்புத்தொழில் சிறப்பாக நடக்க, பிரம்மா இங்கு 'ஆரண கேதம்' என்னும் யாகம் நடத்தினார். இந்த யாகத்திற்கு அவரது துணைவியரான சரஸ்வதி, காயத்ரி, சாவித்திரி ஆகியோர் துணையாக இருந்தனர். அப்போது பிரம்மாவிற்கு காட்சி தந்த அம்பிகை, படைப்புத்தொழில் சிறக்க அருளினாள். யாகத்தின் காரணமாக காட்சி தந்ததால் இவள், ஆரணவல்லி' என்று பெயர் பெற்றாள். ஆரணம் என்றால் வேதம். இவள் தனிசன்னிதியில் காட்சி தருகிறாள்.

புருஷாமிருகம்: பாண்டவர்கள் தங்களது தந்தையின் நன்மை கருதி நாரதரின் ஆலோசனைப்படி ராஜசூய யாகம் நடத்த எண்ணினர். யாகத்திற்கு பொருள் வேண்டி அவர்கள் பல இடங்களுக்கும் சென்றனர். குபேரபட்டணம் சென்ற பீமன், அவனது நந்தவனத்தில் மனிதன், விலங்கு சேர்ந்த வடிவில் புருஷாமிருகம் இருந்ததைக் கண்டான். அதன் பலமறிந்த பீமன், யாகத்திற்கு உதவி செய்ய வரும்படி அழைத்தான். அந்த மிருகம் அவனிடம், “பீமா! என் சிந்தையில் எப்போதும் சிவன் இருக்கிறார். நீ முன்னே செல்ல, நான் சிவனைத் தியானித்தபடியே உன்னை பின் தொடர்ந்து வருவேன். ஆனால், நீ வேகமாகச் செல்ல வேண்டும். எங்காவது ஒரு இடத்தில் நான் உன்னை நெருங்கி விட்டால், அது என் சிவ தியானத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். அப்போது நான் உன்னைக் கொன்று விடுவேன். எனவே அவ்வாறு நடந்து கொள்ளாதே,” என்று நிபந்தனை விதித்தது.

புருஷாமிருகம் தன்னை நெருங்கிய போதெல்லாம் பீமன் அவ்விடத்தில், கிருஷ்ணரால் தனக்கு வழங்கப்பட்ட மந்திரக்கல்லை எறிந்தான். அங்கு தீர்த்தத்துடன் சிவலிங்கம் தோன்றியது. புருஷாமிருகம், அங்கு நின்று சிவனை வழிபட்டது.

அந்நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட பீமன், தன் ஓட்டத்தை அதிகப்படுத்தினான்.

திருவாதவூரைத் தாண்டும்போது, மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி, இங்குள்ள விஷ்ணு தீர்த்தத்தின் நடுவில் அந்த மிருகம் தங்கிவிட்டது. சிவராத்திரியன்று இங்குள்ள சிவனையும், புருஷாமிருகத்தையும் தரிசிப்பது சிறப்பான பலன் தரும்.

கருப்பு மருந்து: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையன்று புருஷாமிருகத்திற்கு 'கருப்பு' என்னும் மருந்து சாத்தும் வைபவம் நடக்கிறது. இதற்காக பல தேங்காய்களை தீயிலிட்டு எரிப்பர். அதில் கிடைக்கும் கரித்துகளில் நல்லெண்ணெய் சேர்த்து இந்த கலவையைத் தயாரிப்பர். இப்பகுதியில் வறட்சி ஏற்படும்போதும், மழை பெய்ய வேண்டி, புருஷாமிருகத்திற்கு கருப்பு சாத்தி வழிபடும் வழக்கம் உள்ளது.

மாணிக்கவாசகர் அவதாரம்: திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் பிறந்த தலம் இது. இவ்வூரில் வசித்த சம்புபாதசிரியரின் மகனாகப்பிறந்த இவர், அரிமர்த்தன பாண்டிய மன்னனின் அமைச்சராகப் பணியாற்றினார். திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோவில்) சிவனிடம் உபதேசம் பெற்று, திருவாசகம் பாடினார். சிவனால் 'மாணிக்கவாசகர்' என பெயர் சூட்டப்பெற்றார். இவருக்கு இங்கு சன்னிதி இருக்கிறது. மதுரையில் நடக்கும் பிட்டுக்கு மண் சுமக்கும் விழாவிற்கு இவரே செல்வார். மாணிக்கவாசகர் பிறந்த இடத்தில், அவருக்கென தனிக்கோவிலும் உள்ளது. கடைச்சங்க புலவர்களில் ஒருவரான கபிலர் இவ்வூரில் பிறந்தவர். இவருக்கும் இங்கு சன்னிதி இருக்கிறது.

சாபம் நீங்கிய தலம்: மகரிஷி மாண்டவ்யர், தவத்தில் இருந்தபோது சனிபகவானின் சஞ்சாரத்தால் துன்பத்திற்கு ஆளானார். எனவே, அவர் சனீஸ்வரரின் கால் முடமாகும்படி சபித்து விட்டார். இதற்கு விமோசனம் வேண்டி சூரியனின் ஆலோசனைப்படி, சனீஸ்வரர் இங்குள்ள சிவனை வழிபட்டு நிவர்த்தி பெற்றார். இதனால் இத்தல சிவனுக்கு, 'வாதபுரீஸ்வரர்' என்றும் பெயருண்டு. முடக்குவாதம், கை, கால், உடல் வலி உள்ளவர்கள் சிவனுக்கு

அபிஷேகம் செய்து, சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள். இவர் கைகளில் தண்டம், சூலம் வைத்து, காகத்தின் மீது கால் வைத்த நிலையில் காட்சி தருகிறார்.

கல்வி சிறக்க வழிபாடு: பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பிரம்மா, தன் தேவியருடன் இங்கு அம்பிகையை வழிபடுவதாக ஐதீகம். கல்வியில் சிறப்பிடம் பெற விரும்புபவர்கள் இந்நாளில் அம்பாள் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொள்கிறார்கள். தேர்வு எழுதும் மாணவர்கள் தரத்தேர்ச்சி பெற இங்கு சென்று வழிபட்டு வரலாம்.

வாகனம் இல்லாத பைரவர்: சிவனின் அம்சமான பைரவர், வேதத்தின் வடிவமான நாயுடன் தான் காட்சி தருவார். ஆனால், இங்குள்ள பைரவருடன் நாய் இல்லை. கையில் சூலமும் கிடையாது. இத்தலத்தில் சிவன், வேதத்தின் வடிவில் அருளுவதால், நாய் வாகனம் இல்லை. வாகனங்களை தொலைத்தவர்கள் அது மீண்டும் கிடைப்பதற்காக, பைரவர் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வேண்டுகிறார்கள். இங்குள்ள விநாயகர், யானை வாகனத்துடன் காட்சி தருகிறார்.

சப்த தீர்த்த தலம்: கோவிலுக்குப் பின்புறம் விஷ்ணு தீர்த்தம் இருக்கிறது. மகாவிஷ்ணு இங்கு நீர் வடிவில் இருப்பதாக ஐதீகம். தவிர கோவிலுக்குள் பிரம்ம தீர்த்தம், சிவன் தீர்த்தம், அக்னி தீர்த்தம், பைரவர் தீர்த்தம், வாயு மற்றும் கபில தீர்த்தம் ஆகியவை இருக்கின்றன. இவ்வாறு சப்த (ஏழு) தீர்த்தங்களுடன் அமைந்த தலம் என்பதால், இங்கு வேண்டிக் கொண்டால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 24 கி.மீ., மாட்டுத்தாவணியில் இருந்து 15 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - மதியம் 12:00 , மாலை 4:00 - இரவு 8:00 மணி.

தொலைபேசி: 0452 - 234 4360.






      Dinamalar
      Follow us