ADDED : அக் 27, 2016 03:04 PM

ஜோதி வடிவில் காட்சியளித்த விளக்கொளிப்பெருமாள் காஞ்சிபுரத்திலுள்ள தூப்புல் என்னும் இடத்தில் அருள்பாலிக்கிறார். இவரைத் தரிசித்தால் வாழ்வு ஒளிமயமாகும்.
தல வரலாறு: பிரம்மா தனக்கு பூலோகத்தில் கோவில் ஏதுமில்லையே என வருந்தினார். இதற்காக சிவனை வரவழைக்க யாகம் ஒன்றை தொடங்கினார். யாகம் நடத்தும் போது மனைவி உடனிருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பிரம்மாவோ தன் மனைவி சரஸ்வதியை அழைக்காமல் யாகத்தை நடத்தினார். கோபம் கொண்ட சரஸ்வதி, “வெளிச்சம் இல்லாமல் இருளால் யாகம் தடைபடட்டும்,” என சாபமிட்டாள். உடனே விஷ்ணுவைச் சரணடைந்த பிரம்மா, யாகம் தடைபடாமல் இருக்க அவரது அருளை வேண்டினார். பிரம்மனின் கோரிக்கையை ஏற்ற விஷ்ணு, ஜோதி வடிவில் காட்சியளித்து சரஸ்வதியை சமாதானம் செய்து யாகம் தொடர்ந்து நடக்க அருள்புரிந்தார். இதனால் இவர் 'விளக்கொளி பெருமாள்' என்ற திருநாமம் பெற்றார். இவருக்கு கோவில் அமைக்கப்பட்டது. இவரைத் தரிசித்தால் வாழ்க்கை ஒளிமயமாகும்.
தர்ப்பை வனம்: விளக்கொளி பெருமாளுக்கு தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர் என்ற பெயர்கள் உண்டு. பிரம்மாவுக்கு பெருமாள் காட்சியளித்த போது இத்தலம் தர்ப்பைப்புல் நிறைந்த வனமாக இருந்ததால் 'தூப்புல்' எனப்பட்டது. இது குளிர்ந்த இடமாக விளங்கியதால், 'திருத்தண்கா' என்றும் பெயர் பெற்றது.
மரகதவல்லித் தாயார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். கருவறை விமானத்தை ஸ்ரீசக்கர விமானம் என்பர். லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள், ஆழ்வார்கள், கருடன், வேதாந்த தேசிகன் ஆகியோருக்கு சன்னிதிகள் உள்ளன. இங்குள்ள குளம் சரஸ்வதி தீர்த்தம் எனப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் ஒன்று. வைணவ ஆச்சாரியரான வேதாந்த தேசிகன் இத்தலத்தில் அவதரித்தவர். திருமங்கையாழ்வார் இத்தலத்து பெருமாளைப் பாடியுள்ளார்
வேதாந்த தேசிகன்: வேதாந்த தேசிகன் திருப்பதி ஏழுமலையான் அருளால் அவதரித்தவர். இவரது தாயார் குழந்தை வரம் வேண்டி ஏழுமலையானை வழிபட்டார். வேண்டுதலை ஏற்ற பெருமாள், திருப்பதி கருவறையில் இருந்த ஆராதனை மணியின் அம்சமாக வேதாந்த தேசிகனைப் பிறக்கச் செய்தார். நூறாண்டுக்கும் மேலாக வாழ்ந்த தேசிகன், லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டு கல்வியில் சிறந்து விளங்கினார். சமஸ்கிருத நூல்களை தமிழில் மொழி பெயர்த்தார்.
காஞ்சிபுரம் வரதராஜர் மீது அடைக்கலப்பத்து என்னும் பாமாலை பாடினார். தேசிகனது புதல்வர் நயினவரதாச்சாரியார் காலத்தில் விளக்கொளிப் பெருமாள் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. மரகதவல்லித் தாயார் சன்னிதி அருகில் வேதாந்த தேசிகன் சன்னதி இருக்கிறது. அவர் வணங்கிய லட்சுமி ஹயக்ரீவர் சிலை இங்கு உள்ளது. சித்திரை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் தேசிகன் அவதார வைபவம் நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறக்கவும், மணமான தம்பதியர் குழந்தை வரம் வேண்டியும் இவரை வழிபட்டு பலனடைகின்றனர்.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோவில்.
நேரம்: காலை 7:30 -10:00, மாலை 5:00 - இரவு 7:00 மணி.
அலைபேசி: 98944 43108.

