ADDED : ஜூலை 29, 2016 10:24 AM

நீங்கள் சித்தர் வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர் என்றால், சேலம் மாவட்டம் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு செல்லலாம். இங்கு ஆடிப்பெருக்கு விழா இன்று முதல் ஐந்து நாட்கள் நடக்கிறது.
தல வரலாறு: உயிர்களின் வாழ்க்கை மகத்துவம் பெற, இறை வழிபாடு மேற்கொண்ட சித்தர்கள் தவம் செய்ய கொல்லிமலை வந்தனர். அவர்கள் சிவலிங்கம் ஸ்தாபித்தனர். தர்மத்தை (அறம்) பின்பற்றிய சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இந்த சிவனுக்கு, 'அறப்பளீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் சிவலிங்கம் மண்ணில் புதைந்து விட்டது. விவசாயி ஒருவர் நிலத்தை உழுதபோது, கலப்பை ஓரிடத்தில் சிக்கியது. தோண்டிய போது அந்த லிங்கம் கிடைத்தது. இலை, தழைகளால் பச்சைப்பந்தல் அமைத்து சிவனை பூஜித்தனர். பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது.
கொல்லிமலை: பசுமையான மலையின் உச்சியில் அற்புதமாக அமைந்த கோவில் இது. கொல்லி மரங்கள் நிறைந்திருந்ததால், இம்மலைக்கு இப்பெயர் ஏற்பட்டது. கொல்லிமலை பயணம் திகிலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். குழந்தைகள் பெரிதும் ரசிப்பார்கள். அடிவாரத்திலிருந்து பஸ்சில் கோவிலுக்குச் செல்ல 3 மணி நேரம் ஆகும். தென்றலை அனுபவித்து, இயற்கையின் வனப்பை ரசித்தபடி செல்லும் இப்பயணம் புதிய அனுபவமாக இருக்கும். கோவில் வாசல் வரை வாகனங்கள் செல்ல வசதியுண்டு.
ஆடிப்பெருக்கு: அறப்பளீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. ஆக.2 ஆடிப்பெருக்கன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு உண்டு. பொதுவாக சிவனின் அம்சமான அஸ்திரதேவர் தான், தீர்த்தவாரி காண்பார். ஆனால், இங்குள்ள பஞ்சநதி தீர்த்தத்தில் நடராஜர் தீர்த்தவாரி காண்கிறார்.
மீனுக்கு நைவேத்யம்: ஒருசமயம் அறப்பளீஸ்வரரைத் தரிசிக்க வந்த பக்தர்கள், பஞ்சநதி தீர்த்தத்திலுள்ள மீன்களைப் பிடித்து சமைத்தனர். சிவதரிசனத்திற்கு பிறகு அதை சாப்பிடலாம் என்றெண்ணி, மீன்குழம்பை தீர்த்தக்கரையில் வைத்தனர். அப்போது சமைக்கப்பட்ட மீன்கள் உயிர்பெற்று நதிக்குள் குதித்தன. அவ்வேளையில் ஒலித்த அசரீரி, மலையில் இருக்கும் ஒவ்வொரு உயிரிலும் சிவனே வசிப்பதாக கூறியது.
இந்நிகழ்வின் அடிப்படையில் சுவாமிக்கு 'அறுத்த மீன் பொருந்தியிருக்கச் செய்த அறப்பளீஸ்வரர்' என்று பெயர் ஏற்பட்டது. தினமும் காலையில் சுவாமிக்கு படைத்த நைவேத்யத்தை மீன்களுக்கு போடுகிறார்கள்.
அம்மா முன் முருகன்: அம்பிகை அறம்வளர்த்த நாயகி சன்னிதி எதிரே, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகன் இருக்கிறார். கோவிலில் இருந்து சற்று தூரத்தில் மலைப்பகுதியின் மத்தியில் ஆகாய கங்கை தீர்த்தம் அருவியாகக் கொட்டுகிறது.
ஆகாயத்திலிருந்து விழுவது போல இருப்பதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள். அருவிக்குச் செல்ல 1100 படிக்கட்டு இறங்க வேண்டும்.
அருவியிலிருந்து சற்று தூரத்தில் கோரக்க சித்தர், காலாங்கிநாத சித்தர் தங்கிய குகைகள் உள்ளன. சித்தர்கள் பிரதிஷ்டை செய்ததால் இங்குள்ள லிங்கம், 'ஆருஷ லிங்கம்' எனப்படுகிறது. சுவாமி சன்னிதி விமானத்தில் சித்தர்களின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அறப்பளீஸ்வரருக்கு விசேஷ பூஜை உண்டு.
அஷ்டலட்சுமி ஸ்ரீசக்ரம்: அறம்வளர்த்தநாயகி சன்னிதி முன்மண்டபத்தின் மேற்பகுதியில் அஷ்ட லட்சுமி ஸ்ரீசக்ர யந்திரம் உள்ளது. இதன் கீழே நின்று வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதருக்கும், விசாலாட்சிக்கும் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியை காசியில் உள்ள அமைப்பிலேயே அமைத்துள்ளனர். இங்குள்ள ஆகாயகங்கை, பஞ்சநதி தீர்த்தங்கள் புண்ணியம் தருபவை என்பதால், அதில் நீராடி விஸ்வநாதரையும், தனிச் சன்னிதியிலுள்ள பைரவரையும் வழிபட பிறவாநிலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் ஜேஷ்டாதேவி சிலை உள்ளது.
மகாலட்சுமி சன்னிதியில் ஆஞ்சநேயர்: பெருமாள் கோவில்களில் சுவாமி சன்னிதியில் அவரது பக்தரான ஆஞ்சநேயர் இருப்பார். ஆனால், இங்குள்ள மகாலட்சுமி சன்னிதியில் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்.
சரஸ்வதிக்கும் சன்னிதி உண்டு.
மன்னனுக்கு விழா: வல்வில் ஓரி மன்னன் ஆண்ட மலைப்பிரதேசம் இது. இவனுக்கு இங்கிருந்து 11 கி.மீ., தூரத்திலுள்ள செம்மேடு என்ற இடத்தில் சிலை உள்ளது. ஆடிப்பெருக்கன்று இவனுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் விழா எடுக்கப்படும்.
விழாவில் மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் நடக்கும்.
கொல்லிப்பாவை கோவில்: தேவர்களும், மகரிஷிகளும் இங்கு தவமிருந்த போது அசுரர்கள் அவர்களை தொந்தரவு செய்தனர். எனவே, அசுரர்களின் கவனத்தை திசை திருப்ப, ரிஷிகள் விஸ்வகர்மாவின் உதவியுடன் ஒரு பெண் சிலை செய்து, அதற்கு சக்தியூட்டினர். அதற்கு கொல்லிப்பாவை' என்ற பெயர் ஏற்பட்டது. அதன் மீது மோகம் கொண்டு அசுரர்கள் அருகில் நெருங்கினர். அவர்களை அந்த அம்பிகை வதம் செய்தாள். எட்டு கைகளுடன் இருப்பதால் இவளை, 'எட்டுக்கை அம்மன்' என்கிறார்கள். அறப்பளீஸ்வரர் கோயிலில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் கொல்லிப்பாவை கோவில் உள்ளது.
இருப்பிடம்: சேலத்திலிருந்து 80 கி.மீ., நாமக்கல்லில் இருந்து 47 கி.மீ., தூரத்தில் கொல்லிமலை உள்ளது.
நேரம்: காலை 7.00 1.00 மணி, மதியம் 2.30 7.00 மணி.
அலைபேசி: 97866 45101.

