/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
அறுபதாம் கல்யாணத்தன்று அபிராமி அண்ணனைத் தரிசியுங்க!
/
அறுபதாம் கல்யாணத்தன்று அபிராமி அண்ணனைத் தரிசியுங்க!
அறுபதாம் கல்யாணத்தன்று அபிராமி அண்ணனைத் தரிசியுங்க!
அறுபதாம் கல்யாணத்தன்று அபிராமி அண்ணனைத் தரிசியுங்க!
ADDED : ஆக 25, 2016 12:31 PM

நாகபட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோவிலுக்கு அருகில் அமிர்தநாராயண பெருமாள், இங்கு கோவில் கொண்டிருக்கிறார். 60, 80ம் கல்யாணத்தன்று அபிராமியின் அண்ணனான இவரைத் தரிசிப்பது சிறப்பு. இங்கு வழிபட்டால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உண்டாகும் என்பது ஐதீகம்.
தல வரலாறு: தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் கிடைக்கப் பெற்றனர். அசுரர்களை ஏமாற்றிய விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார். அந்தக் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக மாறியிருந்தது. பார்வதி தேவியின் அருள் இல்லாததால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார். தனது மார்பில் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி, அவற்றைப் பார்வதி தேவியாகக் கருதி பூஜித்தார். அப்போது அம்பாள் 'அபிராமி' என்ற திருநாமத்துடன் அங்கு தோன்றி, சகோதரர் விஷ்ணுவுக்கு அமிர்தம் கிடைக்க அருள்புரிந்தாள். அமிர்தத்தை தேவர்களுக்கு விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார். இதனை அறிந்த சுவர்பானு என்னும் அசுரன், தேவரைப் போல வடிவம் தாங்கி அமிர்தத்தைப் பருகினான். அசுரனின் தலையைத் துண்டித்தார் விஷ்ணு. அமிர்தம் பருகியதால் சாகாவரம் பெற்ற அசுரனின் உயிர் நீங்கவில்லை. ஆனால், அசுரனது துண்டான உடல்கள் ராகு, கேது என்ற பெயர் பெற்று, நவக்கிரக மண்டலத்தில் இணைந்தன. அபிராமி அன்னையின் தோற்றத்திற்கும், தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கவும் காரணமான விஷ்ணுவுக்கு திருக்கடையூரில் பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. அமிர்தம் வழங்கிய இவருக்கு 'அமிர்த நாராயண பெருமாள்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
108 திவ்யதேச தரிசனம்: கருவறையில் அமிர்தநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் காட்சியளிக்கிறார். இவரை தரிசித்தால் ஒரே நேரத்தில் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உண்டாகும் என்பது ஐதீகம். அமிர்தவல்லி தாயார் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறாள். மணமாகாத பெண்கள் தாயாரை வேண்டினால் சிறந்த மணவாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பின், பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து நெய்விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இங்குள்ள பால ஆஞ்சநேயர் சன்னிதி விசேஷமானது. கல் திருப்பணி இல்லாமல் கோவில் முழுவதும் சுட்ட செங்கற்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
சஷ்டியப்த பூர்த்தி: திருக்கடையூரில் மட்டுமின்றி, அவரவர் ஊர்களில் சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் 60ம் கல்யாணம், சதாபிஷேகம் என்னும் 80ம் கல்யாணம் நடத்துபவர்கள் திருக்கடையூர் அபிராமியையும், அமிர்தகடேஸ்வரரையும் தரிசிப்பது வழக்கம். இவர்கள் அமிர்த நாராயண பெருமாளை வழிபட்டால் தான் கல்யாணச் சடங்கு முழுமை பெற்றதாக ஐதீகம்.
பரிகாரத் தலம்: சர்ப்ப தோஷம் எனப்படும் ராகு, கேது தோஷத்திற்குரிய பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. இந்த கிரகங்கள் தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, நவராத்திரி, திருக்கார்த்திகை, அனுமன் ஜெயந்தி, ஸ்ரீராமநவமி ஆகிய விழாக்கள் இங்கு நடக்கின்றன. இந்தக் கோவில் பெருமளவு சிதிலமடைந்து கிடக்கிறது. சில முறை திருப்பணி துவங்கியும் தடைபட்டு விட்டது. அறுபதாம் கல்யாணம், எண்பதாம் கல்யாணம் நடத்த இங்கு எத்தனையோ பேர் வருகின்றனர். எல்லாரும் இணைந்து திருப்பணியை முடித்து கோவிலைப் புதுப்பித்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். அறநிலையத்துறையும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருப்பிடம்: மயிலாடுதுறையிலிருந்து 20 கி.மீ., தூரத்தில் திருக்கடையூர். பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோவில்.
நேரம்: காலை 8:00 - மதியம் 1:00 மணி.
அலை/தொலைபேசி: 80982 74712, 04364 - 289 888.

