/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
செவ்வாய் தோஷமா.... கவலையை விடுங்க!
/
செவ்வாய் தோஷமா.... கவலையை விடுங்க!
ADDED : ஏப் 21, 2017 12:18 PM

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கி திருமண யோகம் உண்டாகும்.
தல வரலாறு: கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி, மலை ஒன்றில் முருகனுக்கு கோவில் கட்டினார்.வேலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இதற்கு 'வேலாயுதம் பாளையம்' என பெயர் சூட்டினார். மூலவருக்கு 'பாலசுப்பிரமணியர்' என்ற பெயர் அமைந்தது. பிற்காலத்தில் அருணகிரிநாதர்
'புகழ் மிக்க தலம்' என்னும் பொருளில், 'புகழிமலை மேவு பெருமாளே' என பாடினார். இதனடிப்படையில் இவ்வூர், 'புகழிமலை வேலாயுதம்பாளையம்' என பெயர் பெற்றது.
திருமண யோகம்: கருவறையில் முருகன், ஆவுடையார் மீது நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். பாலகன் வடிவிலுள்ள அவரது கைகளில் சக்திவேல், வஜ்ரவேல் உள்ளது, கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார். செவ்வாய் தோஷம் நீங்கி, திருமணம் கைகூட செவ்வாயன்று பாலாபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். சஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை நாளில் சிறப்பு அபிஷேகம் உண்டு. தல விநாயகராக உச்சிஷ்ட கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள சண்டிகேஸ்வரர் சிற்பம், சிறப்பு மிக்கது. முன் மண்டபத்தில் நவக்கிரகம், சனீஸ்வரர், மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு சன்னிதிகள் உள்ளன.
ஆறு நாட்டான்: 315 படிகளுடன் அமைந்த இந்த மலைக்கோவிலின் அடிவாரத்தில் மயில் வாகனம் உள்ளது. மலையைச் சுற்றிலும் உள்ள ஆறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு குலதெய்வமாக முருகன் விளங்குவதால் 'ஆறுநாட்டான் கோவில்' என வழங்கப்படுகிறது. மலைப்பாதையில் மலைக்காவல் அய்யன் சன்னிதி உள்ளது. அருகில் மாம்பழத்திற்காக முருகன் கோபிக்கும் காட்சி, முருகனை சமாதானப்படுத்தும் அவ்வையார், தினைப்புனம் காத்த வள்ளி, அகத்தியரின் கமண்டல நீர் காகத்தால் காவிரி நதியாக ஓடுதல், பாம்பாட்டி, குரங்கு போன்ற சுதை சிற்பங்கள் உள்ளன. வேம்பு மரத்தடியில் ஒரே கல்லில் சப்த கன்னியர், இடும்பன், விநாயகர் சன்னிதிகள் உள்ளன. சுனைதீர்த்தம் என்னும் மலை தீர்த்தம் இங்குள்ளது.
மலை சுற்றும் முருகன்: ஐப்பசி சஷ்டியில் மலையைச் சுற்றிலும் நான்கு இடங்களில் அசுர வதம் நிகழ்த்தும் முருகன், மயில் வாகனத்தில் எழுந்தருள்வார். அதன்பின் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கும். பங்குனி உத்திரத்தன்று முருகன் மலையைச் சுற்றி வருவார். தைப்பூசத்தன்று முருகன் தன் தேவியருடன் தேரில் எழுந்தருள்வார். அவருக்கு முன்பாக விநாயகரும், வீரபாகுவும் செல்வர். முருகனின் படைத்தளபதி என்பதால், வீரபாகுவிற்கு மரியாதை தரும் விதமாக அவர் செல்வதாகச் சொல்கின்றனர். இவ்வாறு, செல்லும் தேர் பாதியிலேயே நின்று விடும். மறுநாள் காலையில் மீண்டும் கிளம்பி, இரவில் நிலைக்கு வரும். மார்கழி திருவாதிரையன்று நடராஜர், சிவகாமி திருக்கல்யாணம் நடக்கும். அதன் பின் நடராஜரும் மலையைச் சுற்றி வருவார்.
கல்வெட்டு: கோவிலுக்குப் பின்புறம் மலையில் சமணர்களின் குகை உள்ளது. இதைச் சுற்றியுள்ள பாறைகளில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த 'தமிழி'
கல்வெட்டுக்கள் உள்ளன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இதில் பிட்டன், கொற்றன், கீரன், ஓரி போன்ற பழங்காலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இருப்பிடம்: கரூர் - சேலம் வழியில் 18 கி.மீ.,
நேரம்: காலை 9:00 - 1:00 மணி, மாலை 5:00 - 7:00 மணி.
அலை/தொலைபேசி: 94435 51890, 04324 - 257 531

