ADDED : ஜூன் 23, 2017 09:03 AM

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சன்னதித் தெருவில் ஜுரஹரேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் உண்டு. யாருக்காவது ஜுரம் வந்தால், இங்குள்ள சிவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு சிவனே என்றிருப்பார்கள். ஜுரம் குணமானதும் சுவாமிக்கு மிளகு சாதம் நிவேதனம் செய்வார்கள்.
ஒரு சிவராத்திரி... எப்போதும் சிவராத்திரியன்று காஞ்சி மகாபெரியவர், நான்கு கால பூஜை செய்வது வழக்கம். அவரைத் தரிசிக்கவும் பூஜையைப் பார்க்கவும் இரவில் கூட்டம் அலைமோதும். அன்று நள்ளிரவு 2:00 மணி அளவில், பெரியவர் ஜுரஹரேஸ்வரர் கோயிலுக்குப் புறப்பட்டார்.
அவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒருவர் தவிப்போடு கூறினார்:
''இன்று முழுவதும் நீங்கள் உபவாசம் (பட்டினி). இரவெல்லாம் கண்விழித்து பூஜை செய்த களைப்பு வேறு. மடத்திலேயே இத்தனை நேரம் சிவபூஜை தானே செய்தீர்கள். உடல் தளர்ந்திருக்கும் நேரத்தில் நடந்து போய் ஜுரஹரேஸ்வரரைத் தரிசிக்கத்தான் வேண்டுமா? ஓய்வெடுங்களேன்!''
பக்தரைக் கனிவோடு பார்த்த பெரியவர், பதில் கூறவில்லை. நடந்தே கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதைக்கண்டு அங்கு ஏராளமானோர் குழுமினர்.எல்லோருக்கும் ஆசி கூறிய பெரியவர், மடத்திற்கு வந்து சேர்ந்தார்.
மறுநாள் காலை பிரசாதத்துடன், பெரியவரைப் பார்க்க வந்தார் வறுமையால் மெலிந்த தோற்றமுடைய ஜுரஹரேஸ்வரர் கோயில் அர்ச்சகர். தன்னைக் கோயிலுக்குச் செல்ல வேண்டாமே என வேண்டிய பக்தர் அருகே இருப்பதைக் கண்ட பெரியவர் அர்ச்சகரிடம்,'சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது?' என்றார்.
'பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணையாக வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள் வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!''
'இல்லாவிட்டால் சுமாராக எவ்வளவு வரும்?'
'என்ன, ஒரு இருநூறு ரூபாய் தட்சணை கிடைத்தாலே பெரிது.'
அந்த ஏழை அர்ச்சகர் முகத்தில் நல்ல வருமானம் கிடைத்தது பற்றிய மகிழ்ச்சி தென்பட்டது. உடனே பெரியவர் அந்த பக்தரை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வை ஆயிரம் விஷயங்களைப் பேசிற்று. ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய அவரின் தங்கமான மனதை புரிந்துகொண்ட, பக்தரின் விழிகளில் கண்ணீர் திரையிட்டது.

