ADDED : டிச 09, 2016 09:02 AM

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்து, திருவண்ணாமலையில் தன் வாழ்நாளைக் கழித்த ரமணமகரிஷி ஆன்மிகத்தில் மட்டுமல்ல! மற்ற விஷயங்களிலும் கவனம் செலுத்துவார். ஆஸ்ரமத்தில் உள்ள சமையல் அறையில் சாப்பாட்டு இலையில் தையல் சரியாக உள்ளதா.. காய்கள் சரியான அளவில் வெட்டப்பட்டுள்ளதா... மசாலா நன்றாக அரைத்துள்ளதா என்றெல்லாம் கவனிப்பார்.
எந்தக் காய் ஆனாலும், அதன் தண்டு, தோல், வேர் இலைகள் என எல்லா பாகங்களையும் பயன்படுத்த சொல்வார். அன்று என்ன சமைக்க வேண்டும் என்று அவரே பட்டியல் இடுவார். சமைக்கும் போது அவரே எடுத்து சுவை பார்ப்பார் அல்லது சமைப்பவரை பார்க்கச் சொல்வார்.
ஒருமுறை சமையல்காரர் சமைக்கும் போது பருப்பு கெட்டியாகி விட்டது. அதைக் கண்டதும், 'கொஞ்சம் உப்பை போடு' என்றார். அப்படி செய்தால் பருப்பு இன்னும் கெட்டியாகிவிடுமோ என்று சமையல்காரர் சந்தேகிக்க, ரமணரே சட்டென ஒரு கைப்பிடி உப்பை தூவி விட்டார். பருப்பு மிருதுவாகி விட்டது. சமையல்காரருக்கு ஆச்சர்யம்!
ஒரு சமயம் ஒரு பக்தர் தானியங்களை அரைத்த போது மிகவும் கெட்டியாகிவிட்டது. இதைக் கவனித்த ரமணர் 'கொஞ்சம் உப்பு போட்டு அரை' என்றார். அப்படியே அவர் செய்ய தானியம் மளமளவென்று எளிதாக அரைபட்டது.
கே.ஆர்.ராமகிருஷ்ணன்

