sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

தியானம், பிரார்த்தனை - எது சிறந்தது?

/

தியானம், பிரார்த்தனை - எது சிறந்தது?

தியானம், பிரார்த்தனை - எது சிறந்தது?

தியானம், பிரார்த்தனை - எது சிறந்தது?


PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடவுளை வேண்டினால் மட்டுமே நன்மை கிடைக்குமா? படைத்தவரே அவர்தான் என்றால், நாம் கேட்கும் வரை அவர் ஏன் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும்? தியானம் செய்தால் கடவுள் இல்லை என்று அர்த்தமாகுமா? தியானம், பிரார்த்தனை - இதில் எது சிறந்தது? விழிகளைத் திறக்க செய்யும் ஆழமான பதிவு இது, தொடர்ந்து வாசியுங்கள்.

கேள்வி: தியானம் என்றால் என்ன? பூஜை, வழிபாட்டிலிருந்து தியானம் எவ்வாறு வேறுபடுகிறது? சடங்குகள் செய்வதால் பலன் கிடைப்பதைப்போல், தியானம் செய்தால் விரும்பியவாறு நல்ல நிலையை அடைய முடியுமா?




சத்குரு:

கேள்வியிலேயே ஒரு தூண்டில் உள்ளது. 'நான் விரும்பும் நல்லவற்றை அடைய முடியுமா?' இது உங்களுக்கு இருக்கும் பிரச்சனை. நல்ல நிலை மட்டும் போதாது, அந்த நல்ல நிலை நீங்கள் விரும்பியவாறும் இருக்க வேண்டும். வாழ்க்கை நீங்கள் விரும்பியவாறு நடக்கவில்லை என்பதுதான் தற்போது உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒரே பிரச்சனை. அதே நேரத்தில் நீங்கள் கடவுளை நம்புவதாகவும் சொல்லிக் கொள்கிறீர்கள்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றால், கடவுளின் விருப்பப்படியே உங்கள் வாழ்க்கை நடக்கிறது என்று அர்த்தம், இல்லையா? அப்போது, நீங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதில்லையே? உங்கள் நம்பிக்கை மேலோட்டமாக இருப்பதால் அது வேலை செய்வதில்லை.

தியானம் என்றால் என்ன என்று பார்ப்போம்…

உங்கள் உடல் மற்றும் மனம் ஆகியவற்றின் எல்லைக்கு அப்பாற்பட்டு இருப்பது தியானம். உடல் மற்றும் மனத்தின் எல்லைக்குள் நீங்கள் இருக்கும்போது, உடலும் மனமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. அப்போது துயரம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது. இந்த நிலையிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அது எதேச்சையாக நடக்கிறது என்று சொல்லலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதும், துயரமாக இருப்பதும், அமைதியாக இருப்பதும், அமைதியற்றிருப்பதும், உங்கள் வசம் இல்லை என்று இதற்கு அர்த்தம். வெளிச்சூழல் மட்டுமே இவை யாவற்றையும் உங்களுக்காக முடிவு செய்கிறது.

எதைத் தெய்வீகம் என்கிறீர்களோ; எதை அல்லா, ஷிவா, கடவுள் என்று கூறுகிறீர்களோ, எது இந்தப் படைப்புக்கெல்லாம் அடிப்படையாக இருக்கிறதோ அதைத்தான் கடவுள் என்கிறீர்கள். எனவே தியானம் என்பது, உடல், மனம் இல்லாத நிலை. படைப்பின் மூலத்துடன் தொடர்பில் இருக்கும் நிலை.

நான் வழிபாடு செய்தால் மட்டும் போதாதா?

அச்சத்திலும் பேராசையிலுமே பெரும்பான்மையான நேரங்களில் உங்கள் வழிபாடு அமைந்துவிடுகிறது. இதுபோன்ற ஒரு பக்தியை எப்படி தெய்வீகத்துடன் தொடர்புப்படுத்துவது? படைப்புக்கும் இதுபோன்ற நிலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உங்களிடம் இல்லாததை அடைவதற்காக, நீங்கள் தேடுவதையும் விரும்புவதையும் அடைவதற்காக, அவற்றைக் கடவுள் உங்களுக்குத் தருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நீங்கள் பிரார்த்தனை செய்கிறீர்கள். இல்லையா?

உங்கள் வாழ்க்கையை இலவசமாகப் பெற்றுவிடலாம் என்று நம்புகிறீர்கள். வாழ்க்கையை சுமாரான விலைக்கு பேரம் பேசி பெற்றுவிடலாம் என்று நம்புகிறீர்கள். துரதிருஷ்டவசமாக, பிரார்த்தனை வேலை செய்யவில்லை. அச்சத்தோடும் அமைதியற்ற மனதோடும் வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.

வழிபாட்டுக்கும் தியானத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன?

வழிபாட்டின்போது நீங்கள் மட்டுமே பேச முயற்சி செய்கிறீர்கள், கடவுளைப் பேசவிடுவதில்லை. உங்கள் நண்பரின் வீட்டுக்குச் சென்று அரை மணி நேரத்திற்கு அவரை ஒரு வார்த்தையும் பேச விடாதீர்கள். நீங்களே தொடர்ந்து பேசிக் கொண்டிருங்கள். அடுத்த முறை அவர் வீட்டுக் கதவைத் தட்டினால், அவர் வீட்டில் இருந்தாலும் இல்லை என்ற பதில் தானே கிடைக்கும்? நீங்கள் பத்து விஷயத்தைப் பேசும்போது, நண்பருக்கு ஒன்றையாவது பேச அனுமதித்தால் தானே அங்கே உறவு மலரும்? ஆனால் நீங்களே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், நண்பர் உங்களுடன் இருக்க விரும்புவாரா?

அதுதான் உங்களுக்கும் கடவுளுக்குமிடையே நடந்திருக்கிறது. கடவுள் அங்கே முழுமையாக இருந்தாலும் உங்களுடன் இருக்கும்போது அவர் இல்லாதது போல் காணாமல் போய்விடுகிறார். நீங்களே எல்லாவற்றையும் பேசிவிடுவதால் அவர் உங்களைக் கண்டு பயப்படுகிறார்.

தியானம், நீங்கள் பேசுவதற்கான நேரம் அல்ல. நீங்கள் செய்யும் சப்தங்களை நிறுத்திவிட்டு இன்னொன்றுக்கு செவி மடுப்பதே தியானம். நாள் முழுவதும் பேசிக் கொண்டே இருக்கும் நீங்கள், ஒரு நாளின் சில மணி நேரமாவது கடவுளைப் பேச அனுமதியுங்கள். கடவுள் என்னதான் சொல்கிறார் என்பதைக் கேட்போம்.






      Dinamalar
      Follow us