உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ் சினிமாவில் கோலோச்சிய 'பா' வரிசை இயக்குனர்கள் மறைவு

தமிழ் சினிமாவில் கோலோச்சிய 'பா' வரிசை இயக்குனர்கள் மறைவு

தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான இயக்குனர்கள் இதுவரையில் வந்துள்ளனர். ஆரம்ப கால தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குனர்கள் பல புதுமைகளை சாதனைகளை படைத்தாலும் சில இயக்குனர்கள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றனர்.

அவர்களில் 70, 80, 90களில் 'பா' வரிசை இயக்குனர்கள் என மூன்று இயக்குனர்கள் திரையுலகினராலும் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைக் கொடுத்தவரும், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரது திரையுலகப் பயணத்தை ஆரம்பித்து வைத்தவருமான பாலசந்தர் அந்த 'பா' வரிசை இயக்குனர்களில் மூத்தவர்.

1965ல் 'நீர்க்குமிழி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி 2006ல் வெளிவந்த பொய்' படம் வரை இயக்குனராக இருந்தவர் பாலசந்தர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களை இயக்கிய பாலசந்தர் 2014ம் ஆண்டு அவரது 84வது வயதில் மறைந்தார்.

1972ல் வெளிவந்த 'பனிமுடக்கு' என்ற மலையாளப் படம் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானவர் பாலு மகேந்திரா. ஐந்து வருடங்களில் சுமார் 25 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் 1977ல் வெளிவந்த 'கோகிலா' என்ற கன்னடப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

தமிழில் 1979ல் வெளிவந்த 'அழியாத கோலங்கள்' படம் மூலம் இயக்குனராக முதல் படத்திலேயே தடம் பதித்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் படங்களை இயக்கினார். 2013ல் வெளிவந்த 'தலைமுறைகள்' என்ற படத்தை கடைசியாக இயக்கினார். 2014ம் ஆண்டு தனது 74வது வயதில் மரணம் அடைந்தார் பாலு மகேந்திரா.

இன்று மறைந்த இயக்குனர் பாரதிராஜா, 1977ல் வெளிவந்த '16 வயதினிலே' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மொழிகளில் படங்களை இயக்கினார். கடைசியாக 2020ம் ஆண்டு வெளிந்த 'மீண்டும் ஒரு மரியாதை' படத்தை இயக்கினார். இன்று தனது 84வது வயதில் காலமானார்.

பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா ஆகியோர் சம காலங்களில் தமிழ் சினிமாவை வளர்த்தவர்களில் முக்கியமான 'பா' இயக்குனர்கள். பாலசந்தர், பாலுமகேந்திரா ஆகியோரை அடுத்து இன்று பாரதிராஜாவும் மறைந்துவிட்டார். 'பா' இயக்குனர்களின் சாம்ராஜ்ஜியம் உயிராக மறைந்தாலும் அவர்கள் உருவாக்கிய உயிரான சினிமா காலம் கடந்தும் மறையாது நிற்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD, Mississauga
2026-06-10 21:48:41

லிஸ்ட் பெருசா இருக்கும் போல