‛16 வயதினிலே' தந்துவிட்டு ‛84 வயதினிலே' விடைபெற்றார் பாரதிராஜா : ‛மண்வாசனை' தந்தவர் மண்ணுக்குள் மறைந்தார்!
தேனி : மறைந்த இயக்குனர் பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையுடன் தேனி, பெரியகுளம் அருகே காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இயற்கையோடு பின்னிப் பிணைந்த கிராம வாழ்க்கையின் எதார்த்தத்தையும், அந்த மண்ணோடு பிறந்து வளர்ந்த மனித உறவுகளின் மகத்துவத்தையும், மனதிற்கு நெருக்கமாகவும், இதமாகவும் தந்து, மாறுபட்ட சிந்தனையோடு, மகத்தான கலைப்படைப்புகள் உருவாக வழிவகுத்தவர் பாரதிராஜா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். ஏராளமான படங்களில் நடித்தும், சில படங்களையும் தயாரித்தும் உள்ளார்.
சென்னையில் அஞ்சலி
உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமான அவரது உடலுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், ரஜினி, கமல், இளையராஜா, தனுஷ், பாக்யராஜ், மணிரத்னம், சூர்யா, ராதிகா, ராதா உள்ளிட்ட திராளான திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
தேனியிலும் அஞ்சலி
பின்னர் அவரது உடல் இன்று காலை தேனி, காட்ரோட்டில் உள்ள அவரது பண்ணை தோட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது. இங்கும் காலை முதலே ஊர் மக்களும், உறவினர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
ராதிகா, நிரோஷா, சமுத்திரகனி, பொன்ராம், வடிவேலு, சுஹாசினி, நிழல்கள் ரவி, மதுரை முத்து, ராம், தீபா, சித்ரா லட்சுமணன், மாரி செல்வராஜ், பாக்யராஜ், பார்த்திபன், ஆர்கே செல்வமணி, பேரரசு, சினேகன், வேல ராமமூர்த்தி, சிங்கம் புலி, கருணாஸ், தாமு, விக்னேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் இறுதி மரியாதை செலுத்தி அவருக்கு பிரியா விடை கொடுத்தனர்.
அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
இதையடுத்து ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தப்படி துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னியரசு ஆகியோர் பங்கேற்றனர். இறுதிச்சடங்கை பாரதிராஜாவின் மகள் ஜனனி மற்றும் சகோதரர் ஜெயராஜ் ஆகியோர் செய்தனர்.
‛‛16 வயதினிலே, மண்வாசனை, காதல் ஓவியம், கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே, கருத்தம்மா'' என எண்ணற்ற காலத்தால் அழியாத படைப்புகளை தந்து இன்று இந்த பூவுலகிலிருந்தும், கலையுலகிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு தனது 84 வயதில், மண்ணிற்குள் விடைபெற்றுக் கொண்டார். என் இனிய தமிழ் மக்களே என்ற அந்த கணீர் குரல் இன்று தன் ஒலியை மறந்து ஒளியாக விண்ணில் மறைந்தது. ஆனால் அவர் தந்த படைப்புகள் காலத்திற்கும் பேசப்படும்.