உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பெண் தன்மையுள்ள ஆண்கள்: இயக்குனர் மிஷ்கின்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பெண் தன்மையுள்ள ஆண்கள்: இயக்குனர் மிஷ்கின்

இப்போது ஒரு படம் பரபரப்பாக பேசப்பட, மக்களிடம் போய் சென்றடைய இயக்குனர் மிஷ்கினை அழைத்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் பேச வைப்பது நல்லது என்கிறார்கள். அந்தவகையில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடிக்கும் நுாறுசாமி படவிழாவில் மிஷ்கின் பேசியது '' நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா..! என்பதே சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டி தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.

சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால் ஒரு தேசிய விருதை வாங்குவோம். ஒரு பத்து பிலிம் பேர் விருதுகள் வாங்குவோம். இல்லை என்றால்.. ஒரு ஆஸ்கர் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.

நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி. நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில், அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.

பெண்மை தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ...! அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இளையராஜா, ஏஆர் ரஹ்மான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மை தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.

இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்த கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன். இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள் இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள். நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது. நான் விஜய்ஆண்டனி நடித்த படங்கள் பார்த்தது இல்லை. அவர் சிறந்த நடிகர், நல்ல மனுசன். இந்த படத்தில் சுவாசிகா சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரை பாராட்ட வேண்டும். அவர் காலில் விழுந்து வணங்குவேன்'' என்றார்.

பேசி முடித்ததும் சுவாசிகாவின் காலிலும் விழுந்தார் மிஷ்கின். உடனே பதறிப்போனார் சுவாசிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !