ஓடிடி ரிலீஸ் : டிரோலில் சிக்கிய 'கருப்பு'
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் 340 கோடி வசூலித்த 'கருப்பு' திரைப்படம் நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது.
தியேட்டர் வெளியீட்டின் போது இந்தப் படம் அதிகமான விமர்சனங்களில் சிக்கவில்லை. சமூக வலைத்தளங்களில் சூர்யாவின் படங்கள் டிரோலில் சிக்குவது வழக்கம். ஆனால், இந்தப் படம் தப்பித்துவிட்டது. விஜய் ரசிகர்கள் அரசியல் பதிவுகளில் பிஸியாக இருந்ததால் இந்த 'கருப்பு' படத்தைக் கண்டுகொள்ளவில்லை என்றார்கள்.
அதோடு, ஆர்ஜே பாலாஜி தேர்தல் நேரத்தில் தன்னை ஒரு விஜய் ஆதரவாளராகக் காட்டிக் கொண்டார். 'கருப்பு' படத்தைக் காப்பாற்றவே அவர் இப்படி செய்ததாகவும் ஒரு பேச்சு இருந்தது. படம் வெளியான பின்பு முதல்வர் விஜய்யை நேரிலும் சென்று சந்தித்தார். 'கருப்பு' கதை விஜய்க்காக எழுதப்பட்டது என்றும் பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று 'கருப்பு' படம் ஓடிடி தளத்தில் வெளியானதும் ரசிகர்களின் டிரோலில் சிக்கிவிட்டது. குறிப்பாக 'சிங்கம் சூர்யா' கிளைமாக்சுக்கு முன்பாக சண்டைக் காட்சியில் வருவார். அந்தக் காட்சியில் 'சிங்கம் சூர்யா'வின் தலை மட்டும் ஒட்டியிருப்பதை எளிதில் பார்க்க முடிகிறது. அந்த சண்டைக் காட்சியில் யாரோ ஒரு 'டூப்'பை நடிக்க வைத்து அவருடைய தலைக்குப் பதிலாக சூர்யாவின் தலையை ஒட்ட வைத்துள்ளார்கள். ஒரு காட்சியில் டூப் நடிகரும் தெளிவாகத் தெரிகிறார்.
அந்த கிராபிக்ஸை இவ்வளவு மோசமாக செய்துள்ளதாக ஆர்ஜே பாலாஜியையும் சேர்த்து டிரோல் செய்து வருகிறார்கள். படத்தின் பட்ஜெட் அதிகமானதால் குறைந்த செலவில் இப்படி குறையான சிஜி வேலையைப் பார்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.