பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் சூர்யா, சிவகார்த்திகேயன்?
இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முதலில் இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு வர வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. ஆனால், தற்போது சூர்யா 47வது படத்தை 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணமாக கார்த்தியின் 'மார்ஷல்' அல்லது 'சர்தார் 2' ஏதாவது ஒரு படம் இவ்வருட தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் திட்டத்தில் உள்ளதால் சூர்யா படத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
இதேபோல் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' படத்தை இவ்வருட அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வருவதாக குறிப்பிட்டு அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் சேயோன் படமும் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வரலாம் என்கிற எண்ணத்தில் தயாரிப்பு தரப்பில் உள்ளதாக புதிய தகவல் பரவி வருகிறது.