சாருகேசியில் 3 தலைமுறை நடிகர்கள் : இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், சுகாசினி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன் உட்பட பலர் நடித்த சாருகேசி படம், விரைவில் அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் நடந்த இந்த பட விழாவில் சுரேஷ் கிருஷ்ணா பேசுகையில் ''இந்த படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், அவர் மகள் மதுவந்தி, அவர் மகன் என 3 தலைமுறை நடிகர்கள் நடித்துள்ளனர்.
நானும் தேவாவும் பல படங்களில் பணியாற்றி இருந்தாலும், அவர் இசை படத்துக்கு பிளஸ். அவர் கர்நாடிக் மியூசிக் பண்ணுவாரா என பலரும் கேட்டார்கள். அவர் இசையில் பல கர்நாடக சங்கீத பாடல்களை போட்டு இருக்கிறார். அவர் மேஜிக் பண்ணுவா் என நினைத்தேன், அது நடந்தது.
பாடல் எழுத வந்த கவிஞர் பா.விஜய், நானே வசனம் எழுதட்டுமா என்று கேட்டார். நானும் சரி என்றேன். படம் பார்த்த ரஜினிகாந்த் உட்பட பலரும் பா.விஜயை பாராட்டினார்கள். ஒரு கனமான வேடத்துக்கு ரம்யா பாண்டியனை ஒப்பந்தம் செய்தோம். அவர் எப்படி நடிப்பார் என பயந்தோம். அவர் சிறப்பாக நடித்தார். இப்பவெல்லாம் வெற்றி என்ற வார்த்தையை கேட்டு நாளாகிவிட்டது. ஒய்.ஜி.மகேந்திரனின் சாருகேசி நாடகம் தான் இந்த படமாகி இருக்கிறது. அவர் நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.
பாடகர் சங்கர் மகாதேவன் அவ்வளவு நேரம் அவர் நடிப்பை பாராட்டினார். சுகாசினி, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் உடனே நடிக்க ஓகே சொன்னார்கள். தலைவாசல் விஜய் ரோலை பலரும் நடிக்க ஆசைப்பட்டார்கள். சப் டைட்டிலுடன் பல மொழிகளில் இந்த படம் ஓடிடியில் வர இருப்பது இன்னும் மகிழ்ச்சி'' என்றார்.