அன்பிற்கும் வெற்றிக்கும் தகுதியானவள்: சமந்தாவை வாழ்த்திய நயன்தாரா
தெலுங்கில் நடிகை சமந்தா தனது நிறுவனம் சார்பாகத் தயாரித்து, தானே கதாநாயகியாகவும் நடித்த 'மா இன்ட்டி பங்காரம்' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவான இந்தப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. 2023ல் வெளியான 'குஷி' திரைப்படத்தைத் தொடர்ந்து, மூன்று வருடங்களுக்குப் பிறகு சமந்தா நடித்துள்ள படம் இது. சமந்தாவின் இந்த வெற்றிக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாராவும் சமந்தாவுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உனக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சாம்! நீ அன்பிற்கும் வெற்றிக்கும் தகுதியானவள். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கு எனது மிகப்பெரிய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இதற்கு சமந்தா, என் அன்பிற்குரிய நயன் என்று பதிலளித்துள்ளார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்கிற படத்தில் சமந்தா, நயன்தாரா இருவரும் இணைந்து நடித்தபோது நெருங்கிய தோழிகளாக மாறிய இவர்கள், தற்போது வரை அந்த நட்பைக் கடைபிடித்து வருகிறார்கள். அந்த நட்பின் அடிப்படையில் நயன்தாரா சமந்தாவுக்குத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.