உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'சிவாஜி' என்ற திரைக்கலைஞனை அடையாளம் கண்ட தயாரிப்பாளர் பி ஏ பெருமாள்

பிளாஷ்பேக்: 'சிவாஜி' என்ற திரைக்கலைஞனை அடையாளம் கண்ட தயாரிப்பாளர் பி ஏ பெருமாள்


1940களில் ஏ வி எம் தயாரித்த ஒரு சில திரைப்படங்களின் சென்னை நகர விநியோக உரிமையைப் பெற்றிருந்தவர்தான் பி ஏ பெருமாள். இவர் ஏ வி மெய்யப்ப செட்டியாருடன் இணைந்து சொந்தமாக படம் தயாரிக்க விரும்பினார். பாவலர் பி பாலசுந்தரம் அவர்கள் எழுதிய “பராசக்தி” என்ற நாடகம் 'தேவி நாடக சபா' என்ற நாடகக் குழுவினரால் வெற்றிகரமாக அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்ததோடு, அவர்களது புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்றாகவும் இருந்து வந்தது. திரைப்படங்களுக்கு இணையான வசூலையும், சில சமயங்களில் சினிமா படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலை அள்ளித்தரும் அளவிற்கு மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட ஒரு நாடகமாகவும் பார்க்கப்பட்டு வந்ததுதான் இந்த “பராசக்தி” நாடகம்.

அவ்வாறு ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வந்த இந்த “பராசக்தி” நாடகம் கடலூரில் அரங்கேற்றமாகி நடந்து கொண்டிருந்த வேளையில், நாடகத்தைப் பார்ப்பதற்காக ஏ வி மெய்யப்ப செட்டியாரை கடலூருக்கு அழைத்துச் சென்றார் பி ஏ பெருமாள். நாடகத்தைப் பார்த்த ஏ வி மெய்யப்ப செட்டியாருக்கு நாடகம் பிடித்துவிட, நாடக ஆசிரியரான பி பாலசுந்தரத்தை வரவழைத்து, விலை பேசி, பி ஏ பெருமாளுக்காக அதை வாங்கியும் கொடுத்துவிட்டு, சி என் அண்ணாதுரை வசனம் எழுதிய “நல்லதம்பி” திரைப்படத்தை இயக்கியிருந்த இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்க வேண்டும் என பரிந்துரைத்தும் விட்டார். மேலும் படத்திற்கு வசனம் எழுத, அண்ணாதுரையைப் போலவே வசனம் எழுதுபவரும், அன்றைய நாளில் ஒரு சில படங்களுக்கு வசனம் எழுதி புகழ் பெற்றிருந்தவருமான மு கருணாநிதியை “பராசக்தி” படத்திற்கு வசனம் எழுத ஏற்பாடும் செய்துவிட்டார்.

படத்தின் நாயகனாக யாரைப் போடலாம் என்ற யோசனை பிறந்தபோது, “பராசக்தி” படத்தின் நாயகனாக 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியைப் போடலாம் என்பது ஏ வி மெய்யப்ப செட்டியாரின் விருப்பமாக இருக்க, ஒரு புதுமுக நடிகரை நாயகனாக நடிக்க வைக்கலாம் என்பது பி ஏ பெருமாளின் விருப்பமாக இருந்தது. அப்போது 'சக்தி நாடக சபா' என்ற நாடகக் குழுவின் சார்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டு வந்த “விதி”, “நூர்ஜஹான்” ஆகிய நாடகங்களில் நடித்து வரும் கணேசன் என்ற பையன் நன்றாக நடிக்கின்றான். அந்தப் பையனையே நாம் எடுக்க இருக்கும் இந்த “பராசக்தி” திரைப்படத்தில் நாயகனாக நடிக்க வைக்கலாம் என்று ஏ வி மெய்யப்ப செட்டியாரிடம் கூறினார் பி ஏ பெருமாள்.

கணேசனின் நாடக நடிப்பைக் காண்பதற்காக நாடகத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு வந்த ஏ வி மெய்யப்ப செட்டியார், நாடக நடிப்பு என்பது வேறு. சினிமா என்பது வேறு. இதுவரை இந்த கணேசன் எந்த சினிமாவிலும் நடித்ததில்லையே? முதல் முறையாக அந்தப் பையனை ஹீரோவாக நடிக்க வைத்து படம் தோல்வியடைந்துவிட்டால் என்ன செய்வது? நீங்களோ என்னுடன் இணைந்து தயாரிக்கப் போகும் முதல் படம் இது. விஷப் பரீட்சை வேண்டாமே என பி ஏ பெருமாளிடம் ஏ வி மெய்யப்ப செட்டியார் கூற, 'இல்லை, இல்லை! கணேசனையே அந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்போம். நீங்களே பாருங்கள் பிற்காலத்தில் மிகச் சிறந்த நடிகராக வருவார்' என ஆரூடம் சொல்வது போல் சொல்லி பிடிவாதமாக இருந்தார் பி ஏ பெருமாள்.

பின்னர் 'குணசேகரன்' என்ற அந்த நாயகன் கதாபாத்திரத்தில் கணேசனையே நடிக்க வைத்து, “பராசக்தி” படத்தை எடுத்தும் வெளியிட்டனர். படம் வெளிவந்து ஒரே இரவில் கலையுலகின் உச்ச நட்சத்திர அந்தஸ்தை எட்டிப் பிடித்து, அடுத்த ஐம்பதாண்டு காலம் கலையுலகின் தலைமகனாய் 'நடிகர் திலகம்' என உயர்வு பெற்றிருந்த நடிகர் சிவாஜிகணேசனின் நடிப்புத் திறமையை நாடக மேடையிலேயே கண்டு, வெள்ளித்திரையின் வெளிச்சத்திற்கு “பராசக்தி” மூலம் அவரை அடையாளப்படுத்திய அந்த ஆற்றல்மிகு தயாரிப்பாளரான பி ஏ பெருமாள் அவர்களை நடிகர் திலகம் சிவாஜிகணேசனும், அவரது குடும்பத்தாரும் என்றென்றும் நன்றி உணர்வோடு நினைவு கூர்ந்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !