'வெல்கம் டூ த ஜங்கிள்' - அக்ஷய்குமாருக்கு அடுத்த வெற்றி
ஹிந்தித் திரையுலகத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை வசூல் நாயகனாக இருந்தவர் அக்ஷய்குமார். ஆனால், தொடர்ந்து ஆறேழு படங்களுக்கு மேல் அவருக்கு தோல்வியடைந்தது. ஒரு படம் கூட லாபத்தைத் தரவில்லை. சில படங்கள் படுதோல்வியும் அடைந்தன.
அந்தத் தொடர் தோல்வியை, ஏப்ரல் மாதத்தில் வெளிவந்த 'பூத் பங்களா' மாற்றியது. சுமார் 120 கோடி செலவில் தயாரான அந்தப் படம் 250 கோடி வரை வசூலித்து அக்ஷய் குமாருக்கு வெற்றியை பெற்றுத் தந்தது.
அடுத்து கடந்த வாரம் அவர் நடித்து வெளியான 'வெல்கம் டூ த ஜங்கிள்' படமும் நன்றாக ஓடி வருகிறது. இப்படம் தற்போது 100 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரமும் இப்படத்தின் வசூல் நன்றாக இருந்தால் அக்ஷய்குமாருக்கு அடுத்த வெற்றியாக இந்தப் படம் அமையும்.
'வெல்கம் டூ த ஜங்கிள்' படத்தில் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி, திஷா படானி, ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். அஹமது கான் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.