உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பராசக்தி' படத்தில் ரூ.8.39 கோடி சம்பள பாக்கி: நீதிமன்றம் சென்ற இயக்குனர் சுதா

'பராசக்தி' படத்தில் ரூ.8.39 கோடி சம்பள பாக்கி: நீதிமன்றம் சென்ற இயக்குனர் சுதா


சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலரும் நடித்து ஜனவரி மாதம் திரைக்கு வந்த படம் 'பராசக்தி'. சுதா கொங்கரா இயக்கியிருந்த இப்படத்தை, டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ஓரளவு வசூலை பெற்றது.

படம் வெளியாகி கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆன நிலையில், தற்போது பட இயக்குனர் சுதா கொங்கரா, தயாரிப்பாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது, 'பராசக்தி' படத்திற்காக தனக்கு பேசியிருந்த 15 கோடி ரூபாய் சம்பளத்தில் ரூ.8.39 கோடி சம்பள பாக்கியை இன்னும் வழங்கவில்லை என்றும், நிலுவையில் இருக்கும் சம்பளம் தரும்வரை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கியிருக்கும் 'இதயம் முரளி' படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், பராசக்தி படத்திற்கான ஓடிடி, தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த வருவாய் விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ், ஜூலை 8ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தது.

அதர்வா நடிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், 8ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், அதற்குள்ளாக சுதா கொங்கராவுக்கு தரவேண்டிய சம்பள பாக்கியை வழங்கி, திட்டமிட்டபடி இதயம் முரளி படத்தை வெளியிடுவார்களா என்பது இனிதான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

karthikeyan
2026-06-30 15:39:00

d m k sombhu இப்படிதான் yemathum