இயக்குனரானார் பிக் பாஸ் ராஜு ஜெயமோகன்
சுதன் சுந்தரத்தின் 'பேஷன் ஸ்டுடியோஸ்' மற்றும் ஹெச். வினோத்தின் 'அஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ்' இணைந்து தயாரிக்கும் படம் 'அல்மோஸ்ட் நல்லவன்'. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரான ராஜு ஜெயமோகன் இயக்குகிறார். அவரே நாயகனாகவும் நடிக்கிறார். துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். டி.எஸ் பிரசன்னா ஒளிப்பதிவு செய்கிறார் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
படம் குறித்து இயக்குனர் ராஜு ஜெயமோகன் கூறியதாவது: ஒவ்வொரு மனிதரிடமும் நன்மையும் குறைகளும் கலந்திருக்கும் என்ற படத்தின் மையக்கருத்தை 'ஆல்மோஸ்ட் நல்லவன்' என்ற தலைப்பு மிகச்சரியாகப் பிரதிபலிக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், மக்கள் பெரும்பாலும் இரண்டு அடையாளங்களுடன் வாழ்கிறார்கள்: ஒன்று அவர்களின் உண்மையான சுயரூபம், மற்றொன்று இணையத்தில் அவர்கள் உருவாக்கிக்கொள்ளும் பிம்பம்.
சில சமயங்களில், அந்த டிஜிட்டல் அடையாளமே தங்கள் உண்மையான அடையாளம் என்று அவர்கள் நம்பவும் செய்கிறார்கள். அத்தகைய ஒரு நபரைச் சுற்றியும், அதைத் தொடர்ந்து நிகழும் எதிர்பாராத பயணத்தைச் சுற்றியுமே கதை அமைகிறது.
சத்யராஜ் சார் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, பிக் பாஸ் புகழ் தாமரைச் செல்வி, நாடகக் கலைஞர் யாழினி மற்றும் பிரிதம் சக்ரவர்த்தி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இது ஒரு தனித்துவமான 'டார்க் காமெடி' வகையைச் சார்ந்த படம்; அனைத்துத் தரப்பு மக்களையும் இது மகிழ்விக்கும் என்று நான் நம்புகிறேன். என்றார்.