உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'இதயம் முரளி' படத்தால் அட்லியின் 'ராக்கா' பட வாய்ப்பை தவறவிட்ட பிரீத்தி முகுந்தன்!

'இதயம் முரளி' படத்தால் அட்லியின் 'ராக்கா' பட வாய்ப்பை தவறவிட்ட பிரீத்தி முகுந்தன்!

சமீபத்தில் அர்ஜுன் நடிப்பில் கடந்த மே 28ம் தேதி திரைக்கு வந்த படம் 'பிளாஸ்ட்'. இப்படத்தில் அவருடன் பிரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, பரபரப்பான நடிகையாகியுள்ளார் பிரீத்தி முகுந்தன். அடுத்ததாக அதர்வாவுடன் 'இதயம் முரளி' என்ற காதல் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்திருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூலை 10ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், இந்த இதயம் முரளி படத்தினால் அட்லி இயக்கும் 'ராக்கா' படத்தில் நடிக்கும் ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டுள்ளார் பிரீத்தி முகுந்தன். இந்த தகவலை அட்லியே தெரிவித்தார். அவர் கூறுகையில், ''பிரீத்தி முகுந்தன் சிறப்பாக நடிக்கிறார். அதோடு சிறப்பாக நடனமும் ஆடக்கூடியவர். அதனால்தான் ராக்கா படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால் இதயம் முரளி படப்பிடிப்பில் பிரீத்தி பிஸியாக இருந்ததால், நான் கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்க முடியாமல் போனது. இதன் காரணமாகவே ராக்கா படத்தில் அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பெமினா ஜார்ஜ் என்பவரை நடிக்க வைத்துள்ளேன்'' எனத் தெரிவித்துள்ளார் அட்லி.

மேலும், இதயம் முரளி படத்துக்குப்பிறகு, தமிழில் 'தாஷமக்கான்' என்ற படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன், தெலுங்கில் 'எமோ எமோ இடி', ஹிந்தியில் 'நாக்ஜில்லா' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !