40வது வருடத்தில் ராஜாவின்டே மகன் : மம்முட்டி ஒதுக்கிய படம் மோகன்லாலை சூப்பர் ஸ்டாராக்கியது
மலையாளத்தில் கடந்த 1986 ஜூலை 17ம் தேதி மோகன்லால் நடிப்பில் வெளியான 'ராஜாவின்டே மகன்' திரைப்படம் தற்போது நாற்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இயக்குனர் தம்பி கண்ணன்தானம் இயக்கத்தில், டென்னிஸ் ஜோசப் எழுதிய கதையில் உருவான இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் மோகன்லால் ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி மோகன்லாலை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது.
ஆனால் இந்தப் படத்தின் கதையை டென்னிஸ் ஜோசப் எழுதும்போதே இதை மம்முட்டிக்காகத்தான் எழுதி இருந்தார். ஆனால் இயக்குனர் தம்பி கண்ணன்தானத்தின் முந்தைய படங்கள் தோல்வியைத் தழுவி இருந்ததால், மம்முட்டி இந்தப் படத்தில் நடிக்க விரும்பவில்லை. அதேசமயம் மோகன்லாலிடம் இந்தக் கதை சென்றபோது, கதையைக் கேட்காமலேயே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தை தானே தயாரித்த இயக்குனர் தம்பி கண்ணன்தானம் வாழ்வா சாவா என்கிற நிலையில், தனது வீடு, கார் முதலியவற்றை விற்று 45 லட்சம் பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்கினார். படம் வெளியாகி வெற்றியைப் பெற்று 85 லட்சம் வரை வசூலித்தது. தமிழிலும் சத்யராஜ் நடிப்பில் 'மக்கள் என் பக்கம்' என்கிற பெயரில் ரீமேக் ஆகி, வெற்றி பெற்று சத்யராஜுக்கும் ஒரு திருப்புமுனையை இந்தப்படம் ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.