உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 40வது ஆண்டில் 'சம்சாரம் அது மின்சாரம்'

40வது ஆண்டில் 'சம்சாரம் அது மின்சாரம்'

தமிழ் சினிமாவில் தனக்கென பெண் ரசிகைகளை அதுவும் குடும்பத்துப் பெண்களை தனது படங்கள் மூலம் தக்க வைத்துக் கொண்டவர் இயக்குனரும் நடிகருமான விசு. ரைமிங்கான தலைப்புகளுடன் பெண்களுக்காக, பெண்களின் முன்னேற்றம் குறித்த சமூக அக்கறை உள்ள படங்களைத் தந்தவர்.

அவரது படங்களில் 1986ம் ஆண்டு இதே நாளில் ஜூலை 18ல் வெளிவந்த படம் 'சம்சாரம் அது மின்சாரம்'. அந்த ஆண்டிற்கான சிறந்த பொழுதுபோக்குப் படம் என்ற தேசிய விருதை வென்ற படம். அது தவிர பல்வேறு விருதுகளையும் வென்ற ஒரு படம்.



ஒரு கூட்டுக் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள், கணவன் மனைவி உறவு, மகன்களின் பிரச்சனை, மகளின் காதல் என ஒரே படத்தில் ஒரு குடும்பத்தை கண்முன் காட்டிய படம்.

அம்மையப்பன் முதலியார் என்ற கதாபாத்திரத்தில் விசு, அவரது மனைவி கோதாவரி ஆக கமலா காமேஷ், அவர்களது மூத்த மகனாக ரகுவரன், மூத்த மருமகளாக லட்சுமி, இரண்டாவது மகனாக சந்திரசேகர், இரண்டாவது மருமகளாக மாதுரி, மூன்றாவது மகனாக ஹாஜா ஷெரிப், ஒரே மகளாக இளவரசி, வீட்டில் வேலை செய்பவராக மனோரமா, சம்பந்திகளாக கிஷ்மு, டெல்லி கணேஷ் என ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போல நடித்தார்கள்.



சங்கர் கணேஷ் இசையில் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதி இருந்தார். “ஜானகி தேவி, அழகிய அண்ணி, சம்சாரம் அது மின்சாரம், கட்டிக் கரும்பே கண்ணா, ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்,” என அனைத்துப் பாடல்களுமே அன்றைய ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் வராதா என ஏங்கியவர்கள் அதிகம்.



சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படம். தாங்கள் வாங்கிய தொகையை விட 10 மடங்கு லாபம் பெற்றதாக படத்தின் வினியோகஸ்தர்கள் சொன்னார்கள். 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய படம். அந்த விழாவில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் படத்திற்காக அமைக்கப்பட்ட வீடு பல வருடங்களாக 'சம்சாரம் அது மின்சாரம்' செட் என்றே அழைக்கப்பட்டு வந்தது. அந்த வீட்டை அப்படியே வைத்திருந்ததால் அதில் பல படங்களின் படப்பிடிப்பு பிறகு நடந்தது.



பல சிறப்புமிக்க படங்களைக் கொடுத்த ஏவிஎம் நிறுவனத்திற்கு கவுரவம் மிக்க ஒரு படமாக அமைந்த 'சம்சாரம் அது மின்சாரம்' படம் வெளியாகி இன்றுடன் 40 வருடங்கள் நிறைவடைகிறது.

அந்தப் படத்தைப் போல படங்கள் வராதா என்று அதன் ரசிகர்கள் ஏங்குவார்கள். ஆனால், அதை மையமாக வைத்து எத்தனையோ மெகா தொடர்கள் வந்துவிட்டன. பல சீரியல் இயக்குனர்களுக்கு அப்படம் தான் ஒரு இன்ஸ்பிரேஷன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !