உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகர்

பிளாஷ்பேக்: ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகர்


தமிழ் சினிமாவில் 1960களில் அதிக சம்பளம் வாங்கியவர்கள் எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா. 40 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரம் வரை இவர்கள் சம்பளம் இருந்தது. சரித்திர படங்கள் என்றால் 10 ஆயிரம் கூடுதலாக வாங்குவார்கள். காரணம் அதற்கு அதிகப்படியான நாட்களும், உழைப்பும் தேவைப்படும். ஆனால் முதன் முதலாக ஒரு லட்சம் சம்பளம் வாங்கியவர்கள் இவர்கள் யாருமல்ல சந்திரபாபு.

அவர் காமெடியனாக நடித்த படங்களுக்கு 40 ஆயிரம் வரை சம்பளம் பெற்றார். சில படங்களில் நாயகனாக நடித்தார் அதில் முக்கியமானது 'குமாரராஜா'. இந்த படத்தை சிவகாமி பிக்சர்ஸ் சார்பில் கே.முனிரத்னம் என்பவர் தயாரித்தார். அவர் சந்திரபாபுவை அணுகி சம்பளம் பேசியபோது 'ஒரு லட்சம் கொடுத்தால் நாயகனாக நடிக்கிறேன். 50 ஆயிரம் கொடுத்தால் காமெடியனாக நடிக்கிறேன். எது வேண்டுமோ நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார்.

இதற்கு காரணம், ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் காலத்தில் நான் 4 படங்களில் காமெடியனாக நடித்து விடுவேன், என்றாராம். தயாரிப்பாளரும் கொடுத்து விட்டார். அதற்கு காரணம் சந்திரபாபு ஹீரோ என்றதும் அனைத்து ஏரியாக்களும் உடனே விற்று விட்டதாம்.

இந்த படத்தில் சந்திரபாபு ஜோடியாக எம்.என்.ராஜம் நடித்தார், இவர்களுடன் டி.எஸ்.பாலய்யா, டி.எஸ்.துரைராஜ், ஜாவர் சீத்தாராமன், சி.டி.ராஜகாந்தம் ஆகியோர் நடித்தனர். டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார்.

பணக்காரர் டி.எஸ்.பாலைய்யாவின் ஒரே செல்ல மகன் சந்திரபாபு, பெண்களுடன், ஆட்டம் பாட்டம் என பணத்தை செலவு செய்து பொழுதை கழிக்கிறார். அவரை திருத்த விரும்பும் பாலையா, அவருக்கு குடும்ப பெண்ணான எம்.என்.ராஜத்தை திருமணம் செய்து வைக்கிறார். எம்.என்.ராஜம், சந்திரபாபுவை எப்படி திருத்துகிறார் என்பது படத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Bhaskaran, Chennai
2026-07-22 19:34:26

அந்தகாலத்திலேயே நந்தனார் படத்தில் நடிக்க கே.பி சுந்தராம்பாள் ஒரு லட்சம் வாங்கினார் என்பது வரலாறு .தந்தவர் அசன்தாஸ் சேட்