வெளியீட்டுக்கு தயாராகிவிட்ட 'அப்பா குட்டி'
விஜய் ஆண்டனி தற்போது நடித்து முடித்துள்ள படம் 'அப்பா குட்டி'. இது தந்தை மகளுக்குனுமான உறவை சொல்லும் படம். இதில் தந்தையாக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். மகளாக பேபி லிதன்யா நடித்துள்ளார்.
மு.மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் பிரீத்தி அஸ்ரானி, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்பிரியா இசை, அருவி மதன்குமார், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார்.
தற்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. இதுகுறித்து இயக்குனர் மாறன் கூறும்போது “ ஒரு வணிகரீதியான பொழுதுபோக்குத் திரைப்படமாக அப்பா குட்டி அமைந்திருந்தாலும், இதன் முதன்மைப் பொருள் ஒரு தந்தை மற்றும் மகளுக்கு இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தரப்பு குடும்ப ரசிகர்களின் மனதையும் தொடக்கூடிய ஒரு கதையம்சத்தை கொண்ட படம். உணர்வுப்பூர்வமான தருணங்கள், அதிரடிக் காட்சிகள் மற்றும் ஆழமான கதைகூறல் என ஒட்டுமொத்த குடும்பத்தினருக்குமான ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தை தரும். விஜய் ஆண்டனி, தனது உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு மற்றும் அதிரடித் திரையாளுமை மூலமாக மீண்டும் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரத்தை வழங்கவுள்ளார். அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது” என்றார்.