வரிசையில் நிற்காமல் சிறப்பு தரிசனம் செய்த ‛காந்தாரா' நடிகைக்கு பக்தர்கள் கண்டனம்
கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'காந்தாரா' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் சப்தமி கவுடா. சமீபத்தில் இவரும் சக நடிகையான அஸ்வினி கவுடா என்பவரும் மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் தரிசனம் செய்வதற்காகச் சென்றிருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வெயிலில் காத்து நின்ற நிலையில், இவர்கள் நேரடியாக சிறப்பு தரிசனத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் நடிகைகள் இருவரின் செயலைக் கண்டித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இதனையடுத்து சப்தமி கவுடா பொதுமக்களின் அவதிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.
உடன் வந்த நடிகை அஸ்வினி கவுடாவும், நடிகர்களைக் கண்டால் பொதுமக்கள் செல்பி எடுக்கவும் புகைப்படங்கள் எடுக்கவும் சூழ்ந்து கொள்வார்கள். அதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவே தங்களை விரைவாக உள்ளே அழைத்துச் சென்றனர் என்று விளக்கம் அளித்து பக்தர்களைச் சமாதானப்படுத்தினார். ஒவ்வொரு முறையும் பிரபலமான கோவில்களுக்கு வி.ஐ.பிக்கள் வரும்போது இது போன்ற நிகழ்வு ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது.