மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 'கப்பார் சிங்' நடிகர் ரமேஷூக்கு சிரஞ்சீவி 5 லட்சம் உதவி
சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் 'கப்பார் சிங்'. இந்த படத்தில் வில்லன் கும்பலில் ஒருவராகவும், குறிப்பாக காவல் நிலையத்தில் நடக்கும் அந்தாக்சிரி காமெடி சீன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் அறியப்பட்டவர் நடிகர் ரமேஷ். தற்போது இவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஐ.சி.யூ-வில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தத் தகவலை கேள்விப்பட்டதும், நடிகர் சிரஞ்சீவி ரமேஷின் குடும்பத்தாரை வரவழைத்து தன் சார்பாக 3 லட்சமும், சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு தன் சார்பில் 2 லட்சமும் வழங்கியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரமேஷூக்கு மருத்துவ காப்பீடு மூலமாகவும், வேண்டிய உதவிகளை செய்வதாகவும் வாக்களித்துள்ளனர். சமீபத்தில்தான் நடிகர் பவன் கல்யாண் அறுவை சிகிச்சை செய்து ஓய்வு எடுத்துவரும் நிலையில், அவருக்குப் பதிலாக அவர்களின் சகோதரர்கள் இந்த உதவியை செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.