உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 4 குரலில் பேசி நடித்த கமல்

பிளாஷ்பேக்: 4 குரலில் பேசி நடித்த கமல்


1960களில் காமெடியில் உச்சம் தொட்ட படம் 'பலே பாண்டியா' என்றால், 90களில் உச்சம் தொட்ட படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. அதில் சிவாஜி 3 வேடத்தில் நடித்திருந்தார். இதில் கமல் 4 வேடத்தில் நடித்திருந்தார். அது ஒருவரை கொன்று அவரது இன்சூரன்சை அபகரிக்க திட்டமிடும் கதை. இது ஒரு பணக்காரரின் சொத்தை அவரின் நான்கு மகன்களை கொண்டு நான்கு கும்பல் பறிக்க திட்டமிடும் கதை. இரண்டும் ஒருவரின் சொத்தை அபகரிக்க பலர் முயற்சிக்கும் ஒன் லைன் கதை.

'பலே பாண்டியா'வில் கேரக்டரை அடிப்படையாக கொண்ட காமெடி, மைக்கேல் மதன காமராஜனில், ஒரே மாதிரி தோற்றத்தில் இருப்பவர்களால் வரும் குழப்ப காமெடி. இரண்டு படங்களுமே இப்போது பார்த்தாலும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் படங்கள்.

தந்தையின் மரணத்தை துப்பறியும் ஒருவர், பாலக்காட்டு சமையற்காரர், தீயணைப்பு வீரர், நாடக நடிகர் என 4 கேரக்டர்களில் நடித்திருந்தார் கமல். இதில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது பாலக்காட்டு சமையற்காரர் காமேஸ்வரன். ஒரே பாடலில் நான்கு கமலும், அவர்தம் ஜோடிகளும் மாறி மாறி வந்து ஆடுவதுதான் படத்தின் ஹைலைட். அதோடு ஒரு கட்டத்தில் நான்கு கமலும் மீசை எடுத்து விட்டு ஒரே மாதிரி காட்சியளிக்க தனது வசனத்தால் அந்த கேரக்டர்களை கமல் வித்தியாசப்படுத்தி இருந்ததுதான் இதுவரை யாரும் செய்யாத, செய்ய முடியாத விஷயம். பாலக்காட்டு தமிழ், சென்னை பாஷை, வெளிநாட்டு ஆங்கிலம், கரகர கம்மியான குரல் என்பதில் வித்தியாசம் காட்டியிருப்பார்.

கமலுக்கு ஜோடியாக ஊர்வசி, ரூபினி, குஷ்பு நடித்திருந்தார்கள். இவர்களுடன் நாகேஷ், சந்தான பாரதி, வெண்ணிற ஆடை மூர்த்தி, நாசர், மனோரமா, ஜெயபாரதி, டெல்லி கணேஷ், ஆர்.எஸ்.சிவாஜி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கி இருந்தார். இளையராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !