விஜய் சீட் கொடுக்க மறுத்த அந்த இயக்குனர் யார்?
தமிழக சட்டசபை நடந்த மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் ஆனந்த் பேசுகையில், ''தவெக தலைவர் விஜய்யின் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவர், கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒரு குறிப்பிட்ட ஒரு தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் கேட்டார். ஆனால் முதல்வர் விஜயோ 'அந்தத் தொகுதியில் நம்முடைய மாவட்டச் செயலாளர் நீண்ட காலமாக உழைத்திருக்கிறார், அவருக்கே கொடுக்கப்போகிறேன், எனவே மன்னிக்கவும்' என்று கூறினார். அந்தளவுக்கு கட்சி மீது, நிர்வாகிகள் மீது பாசம் உள்ளவர்'' என்று பேசினார்.
இப்போது விஜயிடம் சீட் கேட்ட அந்த இயக்குனர் யார்? அவர் கேட்ட தொகுதி என்ன? இப்போது அந்த தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்தவர் யார் என்ற கேள்வி எழுந்ததுது. ஆனால், அமைச்சர் ஆனந்த் பேசுகையில், பின்னால் அமர்ந்திருந்த வேளாண்துறை அமைச்சர் வினோத், அவர் அருகே இருந்த மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷை கை காட்டினார். இது சட்டசபை வீடியோவிலும் தெரிந்தது. இதனால், விஜய் சொன்ன மாவட்ட செயலாளர் விக்னேஷ் தான் என்றும், அவரின் கிணத்துக்கடவு தொகுதியை தான் குறிப்பிடுவதாகவும் சொல்கின்றனர் சிலர்.
ஒரு சிலர் அந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவர் கிணத்துக்கடவு தொகுதியை கேட்டார் என்கிறார்கள். ஏனென்றால், விக்னேஷூம் கிணத்துக்கடவு தொகுதி, லோகேஷின் சொந்த ஊரும் கிணத்துக்கடவு என்பதால்.. இன்னும் சிலர் அது அட்லி என்கிறார்கள். இன்னொரு தரப்போ நெல்சன் என்கிறது.
வேறொரு தரப்போ, அவர் கண்டிப்பாக பேரரசுதான், அவர் சிவகங்கை தொகுதியை கேட்டார். அவருக்கு மறுத்துவிட்டார் விஜய் என்கிறார்கள். இன்னும் சில இயக்குனர்களின் பெயர்களும் அடிபடுகிறது. இந்த விஷயத்தில் ரகசியத்தை அமைச்சரே வெளியில் சொன்னால்தான் உண்மை நிலை தெரிய வரும். அதுவரை யூகங்களே ஓடும் என்கிறார்கள் கோலிவுட்டில். இன்னும் சிலரோ அது எச். வினோத் என்றும் குறும்புக்கார சிலர் அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை முதல்வர் விஜயின் தந்தை எஸ் ஏ சி என்றும் சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து வருகிறார்கள்.