‛திரிஷ்யம் 3' ஹிந்தி அக்., 2ல் ரிலீஸ்
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வரவேற்பை பெற்ற படம் ‛திரிஷ்யம்'. இதன் மூன்று பாகங்கள் வெளியாகி உள்ளன. ஹிந்தியிலும் திரிஷ்யம் இருபாகங்கள் வெளியாகிவிட்டன. தற்போது அபிஷேக் பதக் இயக்கத்தில் அஜய் தேவ்கன், தபு நடிப்பில் திரிஷ்யம் 3 உருவாகி வருகிறது.
இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்கள், இப்படத்துக்கு திரிஷ்யம் 3 : தி கன்க்ளூஷன் என தலைப்பு வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதோடு இப்படம் 2026 அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளனர். ஹிந்தி பதிப்பு மலையாள படத்தின் அச்சுபிசகாத தழுவலாக இருக்காது. இதன் கிளைமாக்ஸ் மற்றும் பல முக்கிய பகுதிகள் மாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதனால் திரிஷ்யம் 3 படத்தின் ஹிந்தி பதிப்பு கதையை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வரும், அதன் முடிவிற்கு இயக்குனர் எந்த மாதிரியான மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்துள்ளார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த த்ரில்லர் படத்தில் ஸ்ரேயா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர், கமலேஷ் சாவந்த் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.