மக்கள் தான் எங்களை ஹீரோவாக ஆக்குகிறார்கள் : முதல்வர் விஜயையும் புகழ்ந்த ‛டாக்சிக்' ஹீரோ யஷ்
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛டாக்சிக்'. நாளை ஆக., 26ம் தேதி படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது. தவிர ஆங்கில மொழியிலும் ரிலீஸாகிறது.
சென்னையில் நேற்று நடந்த டாக்சிக் பட நிகழ்ச்சியில் ஹீரோ யஷ் பேசியது, வணக்கம் சென்னை! இந்த அன்பிற்கு நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்போது 'என் இரத்தத்தில் இரத்தமான' என்று சொல்லலாம் என்றால் அதை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார். 'என்னை வாழவைத்த தெய்வங்களே' என்று சொல்லலாம் என்றால் தலைவர் ரஜினிகாந்த் சார் சொல்லிவிட்டார். 'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று சொல்லலாம் என்றால் தளபதி விஜய் சார் சொல்லிவிட்டார். அதனால், என்னை தத்தெடுத்த தமிழ்மக்களே என்கிறேன்.
'கே.ஜி.எப் 1' படத்தை வெளியிடத் திட்டமிட்டபோது எனக்குத் தமிழ் மக்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. நீங்கள் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் என்னை வரவேற்று அன்பைப் பொழிந்தீர்கள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அன்பு, நற்செயல்கள் மற்றும் நேர்மறையான எதிர்காலத்தை நோக்கி நகர வேண்டும். இன்று எங்கள் தயாரிப்பாளர் வெங்கட் சாரின் பிறந்தநாள், அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்த சமயத்தில் தமிழ் மக்களுக்கு நான் உண்மையிலேயே சல்யூட் செய்கிறேன். 'ஜனநாயகன்' படம் நெட்டில் லீக் ஆனபோது தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் அது எவ்வளவு பெரிய வேதனை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த தயாரிப்பாளருக்காகவும், விஜய் சார் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்காகவும், லீக் ஆன பிறகும் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்து உழைப்பை மதித்தீர்கள். சினிமாவையும் அதன் பின்னணியில் உள்ள உழைப்பையும் மதித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் .
இந்த பட தமிழ் வசனங்களை எழுதிய கணேஷ் மற்றும் பாடல்களுக்கு உதவி செய்த விக்கி ஆகியோருக்கு நன்றி. எனக்கு மிகவும் பிடித்த நயன்தாரா ஒரு அற்புதமான மனிதர். 'டாக்ஸிக்' திரைப்படம் ஒரு தீவிரமான உணர்வு மற்றும் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வித்தியாசமான முயற்சி . தமிழ் மக்கள் எப்போதுமே புதுமையான முயற்சிகளை ஆதரிப்பவர்கள். கே.ஜி.எப் படத்திற்கு ஆசிர்வதித்தது போல, இந்தப் படமும் உங்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக இருக்கும்.
இயக்குநர் கீது மோகன்தாஸின் திறமையையும் உழைப்பையும் மக்கள் திரையில் பார்ப்பார்கள். சென்னையைச் சேர்ந்த பல கலைஞர்கள், செட் அமைப்பாளர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள் எனப் பலர் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர் . சினிமா என்பது கன்னட சினிமாவோ அல்லது தமிழ் சினிமாவோ மட்டுமல்ல, இது பல்வேறு மொழிகள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து உருவாக்கும் கூட்டு முயற்சி, இதுவே இந்திய சினிமா.
விஜய் சாரின் அர்ப்பணிப்பைப் பார்த்து பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அவர் தமிழக மக்களுக்காகக் காட்டும் அர்ப்பணிப்பு அளப்பரியது. மக்கள் கொடுத்த அன்பைத் திருப்பித் தரும் நிலைக்கு அவர் வந்துள்ளார். அவரது புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள். நாங்கள் சாதாரண மனிதர்கள். மக்கள் தான் எங்களை ஹீரோவாக ஆக்குகிறார்கள். அவர்களை மகிழ்விப்பது மட்டுமே எங்கள் கடமை; தொடர்ந்து மக்களை மகிழ்விப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்