பான் இந்தியா : பரிதவிப்பில் பிரம்மாண்டப் படங்கள்?
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2', பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவந்த 'கேஜிஎப் 2', சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த 'புஷ்பா 2' ஆகிய படங்கள் தந்த 1000 கோடிக்கும் அதிகமான வசூல், பிரம்மாண்ட வெற்றி 'பான் இந்தியா' என்ற வார்த்தையை இந்திய சினிமா ரசிகர்களிடம் பரவலாக்கியது.
இந்திய ஸ்டார் அந்தஸ்து
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அதன் நாயகனாக பிரபாஸ் தெலுங்கு நடிகர் என்பதிலிருந்து இந்திய நடிகர் என்ற ஒரு உயர்ந்த அந்தஸ்துக்குப் போனார். ஆனால், அதற்கடுத்து அவரது நடிப்பில் பான் இந்தியா அடையாளத்துடன் வந்த சில படங்கள் வசூல் ரீதியாக பெரிய தோல்வியைக் கொடுத்தது. 'கல்கி 2898 ஏடி' தெலுங்குப் படம் மட்டும் தப்பித்து 1000 கோடி வசூலைக் கடந்தது.
அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான 'புஷ்பா 2'-வும் பெரிய வரவேற்பைப் பெற்று அவருக்கு இந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்தித் தந்தது.
யஷ் நடித்து வெளிவந்த கன்னட சினிமாவான 'கேஜிஎப் 2' படம் அந்த மொழி சினிமாவை இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பேச வைத்தது. தமிழ் சினிமா கூட புரியாத ஒரு வசூல் சாதனையை, வரவேற்பை அந்தப் படம் பெற்றது.
டாக்சிக் தந்த அச்சம்
அதற்குப் பிறகு நான்கு வருடங்களாக 'டாக்சிக்' படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் யஷ். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்பட்ட 'டாக்சிக்' படம் தந்த தோல்வியும், மோசமான விமர்சனங்கள், வரவேற்பும் தற்போது ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு கடந்த 9 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என முக்கிய மொழிகளில் பல படங்கள் பான் இந்தியா படங்களாக வெளிவந்தன. ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட படங்கள் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அவற்றில் ஒரு சில படங்கள் மட்டும்தான் வசூல் ரீதியாக லாபத்தைப் பெற்றன.
பான் இந்தியா ஆசையும்... பல கோடி நஷ்டமும்...
முன்னணியில் உள்ள உச்ச நடிகர்கள் மட்டுமல்லாது, அடுத்த நிலையில் உள்ள நடிகர்களுக்குக் கூட பான் இந்தியா ஆசை வந்ததுதான் ஆச்சரியம். அவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி நமக்குக் கிடைக்காதா என்ற ஒரு பேராசை, நம்பிக்கை. அவர்கள் வலுவாக இருக்கும் மொழிகளில் கூட இந்த பான் இந்தியா ஆசை அவர்களது நிலையை அசைத்துப் பார்த்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
இப்படியான பான் இந்தியா ஆசையில் வந்த படங்கள் தந்த நஷ்டம் மட்டும் சில ஆயிரம் கோடி கூட இருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவலைத் தருகிறது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரம்.
டாக்சிக் படத்தால் எழுந்த அச்சம்
பிரபாஸ் நடித்து வெளிவந்த சில பான் இந்தியா படங்களின் தோல்வியைப் பற்றிக் கூட பலரும் கவலைப்படவில்லை, அது பற்றி அதிகம் பேசவுமில்லை. ஆனால், 'டாக்சிக்' படத்திற்குக் கிடைத்த வரவேற்பு, அதனால் வரப் போகும் நஷ்டம் பற்றி பான் இந்தியா அளவில் உள்ள மொழித் திரையுலகினர் பேசி வருகிறார்கள்.
அந்தப் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் மட்டும் இந்த ஆண்டில் பான் இந்தியா படமாக வெளியிட்ட தமிழ்ப் படமான, தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி படமான 'ஜனநாயகன்', கன்னடத்தில் வெளிவந்த 'கேடி தி டெவில்,' சமீபத்தில் வெளிவந்த 'டாக்சிக்' ஆகிய படங்கள் மூலம் மட்டுமே அத்தயாரிப்பாளரின் நஷ்டம் குறைந்தது 500 கோடியைக் கடக்கும் என்று ஒரு தகவலைச் சொல்கிறார்கள்.
இப்படியான தகவல் அடுத்து வெளிவர உள்ள பான் இந்தியா படங்களின் தயாரிப்பாளர்களையும், அதில் நடிப்பவர்களையும் பரிதவிப்பிலும், ஒரு அச்சத்திலும் தள்ளியிருக்கிறது என்பதையும் திரையுலகில் உள்ளவர்கள் பகிர்கிறார்கள்.
வரவிருக்கும் பான் இந்தியா படங்கள்
அடுத்து தமிழில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2', தனுஷ் நடித்துள்ள 'ஓம்', தெலுங்கில், நானி நடித்துள்ள “தி பாரடைஸ்', விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபலி', பிரபாஸ் நடிக்கும் 'பௌசி', ஹிந்தியில் ரன்பீர் கபூர், யஷ் நடித்துள்ள 'ராமாயணா - பார்ட் 1, ஷாரூக்கான் நடிக்கும் 'கிங்', ஆகிய படங்கள் இந்த ஆண்டில் வர உள்ள முக்கிய பான் இந்தியா படங்கள்.
இவை தவிர 2027ம் ஆண்டில் வெளியாக உள்ள சில பிரம்மாண்ட பான் இந்தியா படங்களின் படப்பிடிப்புகள் சில நூறு கோடி ரூபாய் செலவில் விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது.
சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சில படங்கள் சில நூறு கோடிகளை வசூலித்துத் தருகிறது. சில நூறு கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் சில படங்கள் சில கோடி மட்டுமே வசூலித்துத் தருகிறது.
சிறிய உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் அதிக அடிபடாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் எழக் கூட முடியாது. அப்படியான ஒரு நிலைக்கு பான் இந்தியா படங்கள் சென்றுவிடக் கூடாது என்பதுதான் திரையுலகினரின் வருத்தமாக உள்ளது.