20 ஆண்டுகளுக்கு பின் பிரபாஸ் பட பாடலை வைரலாக்கிய சீன நடனக்கலைஞர்!
தெலுங்கில் 2006-ல் பிரபுதேவா இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான படம் பௌர்ணமி. திரிஷா நாயகியாக நடித்தார். இப்படத்தின் பாடல் ஒன்று 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையத்தில் அலைகளை உருவாக்கி, உலகளாவிய ரசிகர்களை சென்றடைந்துள்ளது. இந்த பாடலுக்கு சீன நடனக் கலைஞர் ஒருவர் ஆடியுள்ள பாரம்பரிய நடன வீடியோ வைரலாகி, பார்வையாளர்கள் மற்றும் பல டோலிவுட் பிரபலங்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
பாரத வேதமுகா என்று தொடங்கும் இந்த பாடலை சிறிவென்னல சீதாராம சாஸ்திரி எழுதியுள்ளார். கே.எஸ்.சித்ரா பாடிய இப்பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த பௌர்ணமி படம் திரையரங்குகளில் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், அதன் பாடல்கள், குறிப்பாக இந்த பாரத வேதமுகா பாடல் தெலுங்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது.
இந்த வைரல் வீடியோவில் ஆடியிருப்பவர் சீன நடனக்கலைஞர் மீரா வாங். இவர் குச்சிப்புடி மற்றும் இந்திய பாரம்பரிய நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது இந்த நடனம் பாரத வேதமுகா பாடலுக்கு மீண்டும் ஒரு புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த நடனக் கலைஞர் மீரா வாங் இதுவரை இந்தியாவிற்கு வந்ததே இல்லை.
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரைச் சேர்ந்த ஆலா வேணுகோபால் என்பவர்தான் தனது குச்சிப்புடி குரு என்று தெரிவிக்கும் இவர், தெலுங்கு திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடி தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காலத்தால் அழியாத காவியமான மாயாபஜார் படத்தின், ஆஹா நா பெள்ளண்டா பாடல் உட்பட பல பிரபல தெலுங்குப் பாடல்களுக்கான நடன வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன.