அன்றைய பதிவுக்கு பதிலடியா... : சூர்யா Vs சிவகார்த்திகேயன்
சமூக வலைத்தளங்களில் நடிகர் சிவகார்த்திகேயனின் நேற்றைய பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று கார்த்தி நடித்த 'சர்தார் 2' படமும், சூரி நடித்த 'மண்டாடி' படமும் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன், சூரி இருவரும் நெருக்கமானவர்கள். அண்ணா, தம்பி என அழைத்துக் கொள்பவர்கள். இருவரது கூட்டணியில் வந்த சில படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 'சர்தார் 2' படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இதற்கு முன்பு 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
நேற்று வெளியான 'சர்தார் 2', 'மண்டாடி' படங்களுக்கு அடுத்தடுத்து எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதில் கார்த்தி - பிஎஸ் மித்ரன் கூட்டணியின் 'சர்தார் 2' படத்திற்கான வாழ்த்து ஏதோ ஒரு கடமைக்காகப் பதிவிட்டது போல ஒரு வரியில் முடிந்துவிட்டது.
ஆனால், சூரியின் 'மண்டாடி' படத்திற்கான பதிவில், “மண்டாடி படத்திற்கு சிறப்பான ரிப்போர்ட். சூரி அண்ணனின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்புக்கு உண்மையான பலன் கிடைத்துள்ளது. நல்ல கதைக்களம் எப்போதும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும். இந்த மாபெரும் வெற்றிக்கு என் அன்பு அண்ணனுக்கும், ஒட்டு மொத்த குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்,” என நான்கு வரிகளில் பதிவிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி, சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' படமும், கார்த்தி நடித்த 'சர்தார்' படமும் ஒரே நாளில் வெளியாகின. அப்போது கார்த்தியின் அண்ணனான நடிகர் சூர்யா, 'பிரின்ஸ்' படத்திற்கு ஒரே ஒரு வரியில் கடமைக்காக ஒரு வாழ்த்தையும், 'சர்தார்' படத்திற்கு, “நல்ல கதைக்களம் எப்போதுமே மிகப் பெரிய வெற்றியைப் பெறும். 'சர்தார்' டீம் நல்ல சிறந்தவற்றைக் கேட்டு வருகிறேன். எல்லா இடங்களிலும் நேர்மையான தாக்கத்தை இந்தப் படம் ஏற்படுத்துவது சூப்பர் மகிழ்ச்சி, வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டிருந்தார்.
சூர்யாவின் அப்போதைய பதிவுக்கு சிவகார்த்திகேயன் இப்போது தக்க பதிலடி கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்றும் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.