உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: இமேஜிற்கு பொருந்தாத கதை.. ஏமாற்றம் தந்த எம் ஜி ஆரின் “தாலி பாக்கியம்”

பிளாஷ்பேக்: இமேஜிற்கு பொருந்தாத கதை.. ஏமாற்றம் தந்த எம் ஜி ஆரின் “தாலி பாக்கியம்”


கணீர் குரல், தெளிவான தமிழ் உச்சரிப்பு, உணர்ச்சி மிகு நடிப்பு என இம்மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற உன்னதமான தமிழ் திரைக்கலைஞர்கள் வெகு சிலரில், குறிப்பிடும்படியான ஒரு திரை ஆளுமையாக பார்க்கப்பட்டவர்தான் மறைந்த பழம்பெரும் நடிகை பி கண்ணாம்பா. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், அனல் பறக்கும் இவர் பேசிய தமிழ் வசனங்கள், அன்றைய ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தன.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் தாயாக “மனோகரா”, எம் ஜி ஆரின் தாயாக “தாய்க்குப் பின் தாரம்”, “தாய் சொல்லைத் தட்டாதே”, “தாயைக் காத்த தனயன்” போன்ற பல திரைப்படங்கள் இவரது உணர்வுபூர்வமான நடிப்பிற்கும், உன்னதமான குரல் வளம் கொண்ட வசனத்திற்கும் ஒரு சிறிய உதாரணங்களாகச் சொல்லலாம். இவர் கலையுலகில் பயணித்து வந்த காலங்களில் ஒரு நடிகையாக மட்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல், திரைப்பட தயாரிப்புப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து எம் ஜி ஆரின் அம்மாவாக இவர் நடித்து வந்த 1960களில், எம் ஜி ஆரை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி பூவாளுர் சுந்தரராமன் எழுதி, வானொலி நாடகமாக வந்த “திருட்டுத் தாலி” என்ற நாடகத்தை திரைப்பட வடிவமாக்கவும் முடிவு செய்திருந்தார். படத்தின் வசனத்தை இயக்குநர் கே பாலசந்தரை வைத்து எழுதுவதென்றும், படத்தின் இயக்குநராக எம் ஏ திருமுகத்தையும், படத்தில் எம் ஜி ஆரின் தாயாக தானே நடிப்பதென்றும் முடிவு செய்யபட்டிருந்த நிலையில், திடீரென படத்தின் வசனத்தை ஆரூர்தாஸ் எழுதுவதாகவும், தங்களது சொந்தத் தயாரிப்பு என்பதால் நடிகை பி கண்ணாம்பாவின் கணவரும் இயக்குநருமான பி நாகபூஷணம், தானே இந்தப் படத்தை இயக்கப் போவதாகவும் கூற, இயக்குநர் எம் ஏ திருமுகமும் இத்திட்டத்திலிருந்து விலகும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே, படத்தின் தயாரிப்பாளரான நடிகை பி கண்ணாம்பாவிற்கு புற்று நோய் இருப்பதாக கண்டறியப்பட, அதன் காரணமாக அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட, படத்தில் எம் ஜி ஆரின் தாயாக நடிப்பதற்கு நடிகை எம் வி ராஜம்மா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தாலி சென்டிமென்டை மையக் கருப்பொருளாக வைத்து, காதல் கலந்த ஒரு குடும்ப நாடகக் கதையாக எடுத்திருந்த இத்திரைப்படம், வழக்கமான எம் ஜி ஆர் பட பாணியிலிருந்து அந்நியப்பட்டிருப்பதாக ஓர் உணர்வை தந்ததால், அன்றைய எம் ஜி ஆரின் ரசிகர்களுக்கு அது ஏற்புடையதாக இல்லாமல் போக, அவரது ரசிகர்கள் இத்திரைப்படத்தை நிராகரித்தனர். அதனால் எம் ஜி ஆரின் இமேஜிற்கு சற்றும் பொருந்தாத கதைக் களத்தைக் கொண்டு வெளிவந்த இந்த “தாலி பாக்கியம்” திரைப்படம் அவரது ரசிகர்களுக்கு மட்டும் ஏமாற்றத்தைத் தராமல், வசூல் ரீதியாகவும் தோல்வியையே தழுவியிருந்தது. மேலும் இத்திரைப்படம் ஆரம்பிக்கும்போது உயிரோடிருந்த படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான பி கண்ணாம்பா, இத்திரைப்படம் வெளிவரும் முன்பே இறைவனடி சேர்ந்தார் என்ற ஒரு சோகத்தையும் சுமந்திருந்த திரைப்படமாக நினைவு கூறப்படுவதுதான் இந்த “தாலி பாக்கியம்”.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !