லஷ்மிகாந்தன் கொலை வழக்கு
தயாரிப்பு : 2 எம் சினிமாஸ், டி பிக்சர்ஸ் .
இயக்கம் : தயாள் பத்மநாபன்
நடிப்பு : வெற்றி, பிரிகிடா, மாறன், ரங்கராஜ்பாண்டே, கவிதாபாரதி, லிசி ஆண்டனி
ஒளிப்பதிவு : எம்.வி. பன்னீர்செல்வம்
இசை : தர்புகா சிவா
வெளியான தேதி : ஜூலை 10 2026
நேரம் : 1 மணிநேரம் 47 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
சூழ்நிலை காரணமாக திருடனாகும் வெற்றி, இன்னொரு சூழ்நிலையில் ஒரு கொலையையும் செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறார். அவருக்கு துாக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. தனது நிலைக்கு சூழ்நிலைதான் காரணம்? அரசு நிறைவேற்றும் துாக்கு தண்டனையும் ஒருவகை கொலையே. துாக்கு தண்டனையே இருக்க கூடாது என்று துாக்கு போடப்படும் முன்பு ஜெயில் அதிகாரியுடன் வாதாடுகிறார் வெற்றி. அப்படியே, தனது கதையை பிளாஷ்பேக் ஆக சொல்கிறார். வெற்றிக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா? அவர் கொலை செய்தது ஏன்? என்பது தயாள் பத்மநாபன் இயக்கிய லட்சுமிகாந்தன் கொலை வழக்கு கதை.
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு என்ற தலைப்பை பார்த்து, 1940களில் பரபரப்பாக பேசப்பட்ட, தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட கொலை வழக்கா என பலருக்கும் சந்தேகம் வரலாம். அதற்கும், இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை. கொலையாகும் பண்ணையார் பெயர் லஷ்மிகாந்தன் என்பதால் இந்த தலைப்பு. இந்த கதை 1970களில் நடக்கிறது. படித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்காமல் வறுமையில் வாடும் ஹீரோ வெற்றி, நண்பர் மாறனுடன் கூட்டணி வைத்து சின்ன, சின்ன திருட்டை செய்கிறார். பிரிகிடாவை காதலித்து திருமணம் செய்கிறார். தங்கள் குடும்ப கஷ்டத்தை முழுமையாக போக்க ஒரு திருட்டை செய்யலாம் என நினைத்து பண்ணையார் கவிதா பாரதி வீட்டுக்கு செல்லும்போது ஒரு சம்பவத்தால் கொலை நடக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது. கொலையாளி நிரபராதியா? அவர் விடுதலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கதை நகர்கிறது.
வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்டு கொஞ்சம் சீரியஸ் கதையை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். 1970களில் கதை நடப்பதாலும் , சொல்லப்படும் கருத்தாலும், வசனங்கள் மற்றும் நடிகர்களின் நடிப்பாலும் படம் வழக்கமான கமர்ஷியல் படங்களில் இருந்து அன்னியப்பட்டு இருக்கிறது. படத்தின் டோன் இளைஞர்கள், புதுமை விரும்பிகளுக்கு மாறுபட்டதாக இருக்கும்.
துாக்கு தண்டனை கைதியாக வரும் வெற்றி உணர்வுபூர்வமாக நடித்து இருக்கிறார். அரசை, சட்டங்களை எதிர்த்து நிறைய கேள்வி கேட்கிறார். பிளாஷ்பேக் காட்சிகளில், காதல் காட்சிகளில் ஓரளவு நடித்து இருக்கிறார். ஆனால், ரொம்ப சீரியஸ் ஆன கேரக்டர் என்பதால் ஹீரோயிசம், தனித்தன்மை எதுவும் இல்லை. ஓரளவு தெரிந்த ஹீரோ எப்படி இந்த கதையில் நடிக்க ஓகே சொன்னார் என்ற கேள்வியும் எழுகிறது. கொலைகாரர்களுக்கு ஆதரவாக அவர் பேசும் வசனங்களும் நெருடல்.
கிராமத்து பெண்ணாக ஹீரோயினாக வரும் பிரிகிடா நடிப்பும் அழகு. ஹீரோ அம்மாவாக வரும் லிசி சில சமயம் இயல்பான நடிப்பு, சில சமயம் மிகைப்படுத்தல் நடிப்பை தருகிறார். அவர் கணவராக வருபவர் சில சீன்களில் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
இவர்களை தவிர, ஊர் பண்ணையராக வரும் கவிதாபாரதி தோற்றம், செயல்கள், பேச்சு தனித்தன்மை. அவரை தவறானவராக காண்பித்துவிட்டு, அவர் பெயரில் ஒரு ஜாதியை சேர்த்து இருப்பது எந்தவகையில் நியாயம் இயக்குனரே? அவர் சம்பந்தப்பட்ட ஒரு சீனில் பெற்ற மகளையே கொச்சையாக பேசுகிறார். அதெல்லாம் முகம் சுளிக்க வை க்கிறது. இத்தனைக்கும் வசனம், திரைக்கதை கவிதா பாரதியே.
ஜெயில் அதிகாரியாக, அந்த கால சீருடையில் வரும் பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே சம்பந்தப்பட்ட சீன்கள், வசனங்கள் படத்துக்கு பிளஸ். அவரும் கேரக்டர் தன்மை உணர்ந்து நடித்து இருக்கிறார். நண்பனாக வரும் மாறன் திருட செல்வது அதற்கு சொல்லும் காரணங்கள் படத்தை கொஞ்சம் கலகலப்பாக்குகின்றது. நீதிபதியாக வரும் கன்யாபாரதி கேரக்டர், கிளைமாக்சில் அவர் செயல்பாடுகள் இயக்குனரின் கொள்கையை பிரதிபலிக்கின்றன.
துாக்கு போடுபவராக வரும் சுப்ரமணியம் சிவாவுக்கும் நல்ல கேரக்டர். அவர் பேச்சு, கெட்அப் அருமை.
1970காலகட்டத்தை, ஜெயில், போலீஸ் ஸ்டேஷன், கிராமத்தை அழகாக காண்பித்து இருக்கிறது பன்னீர்செல்வம் கேமரா. பாரதிதாசன் பாடலை பாட்டாக்கிய தர்புகா சிவாவை பாராட்டலாம். இப்படி சில பிளஸ் இருந்தாலும், படத்தில் நிறைய குறைகள். படம் முழுக்க ஒருவித நாடகத்தன டோனில் அல்லது மிகைப்படுத்தல் நடிப்பில் நகர்கிறது. ஹீரோவின் திருட்டு, அவர் செய்த கொலை, குற்றங்கள் ஆகியவற்றை முதலில் இருந்து கடைசிவரை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். அதை எல்லாராலும் ஏற்க முடியவில்லை. துாக்குதண்டனை கூடாது. அது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை கிளைமாக்சில் விரிவாக சொல்கிறார். கைதிகள் திருந்த வேண்டும். மனிதநேயம் முக்கியம் என சொல்கிறார். ஆனால், அதற்கு முன்பு துாக்குதண்டனை மீதான விமர்சனங்கள், இயக்குனரின் சொந்த கருத்து நம் சட்ட பிரிவை, அரசின் நிலைப்பாட்டை, மக்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கி இருக்கிறது. இன்றைக்கு குற்றங்கள் பெருகும்நிலையில் ஏன் துாக்குதண்டனை கூடாது என்ற கேள்வி வரலாம். அந்த கேள்வி அதிகமாக எழுந்தால் அது படத்தின் கருவை கேள்விக்குறி ஆக்கும். துாக்கு தண்டனை வேண்டாம் என்பவர்களுக்கு இந்த சீரியசனா படம் பிடிக்கலாம். மற்றபடி சில விவாதங்களை, எதிர்ப்புகளை எழுப்புகிற சீரியசான படம்.
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு - மிகைப்படுத்திய நாடகம்