கலிபா (மலையாளம்)
தயாரிப்பு : ஜினு வி.ஆபிரகாம் மற்றும் சூரஜ் குமார்
இயக்கம் : வைசாக்
நடிப்பு : பிரித்விராஜ், மோகன்லால், நீல் நிதின், முகேஷ், மாளவிகா சர்மா, சம்மி திலகன், இந்திரன்ஸ், மோகினி, ரஞ்சி பணிக்கர், சஞ்சு சிவராம்
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : ஜோமோன் டி. ஜான்
வெளியீடு : 20 ஆகஸ்ட் 2026
ரன்னிங் டைம் : 2 மணிநேரம் 39 நிமிடம்
ரேட்டிங் : 2.5/5
வெளிநாட்டில் இருந்து கண்டெய்னரில் வரும் பொருட்களை துறைமுகத்திலிருந்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அனுப்பும் லாஜிஸ்டிக் வேலையை செய்து வருகிறார் ரெஞ்சி பணிக்கர். ஒரு நாள் அப்படி வந்த கன்டெய்னர் ஒன்றில் தங்கம் பிடிபடுபடுவதை தொடர்ந்து கைது செய்யப்படுகிறார். இதன் பின்னணியில் அமைச்சர் ஷம்மி திலகன் மற்றும் அவரது உறவினரான தங்க கடத்தல் மன்னன் நீல் நிதின் முகேஷ் இருப்பதை கண்டுபிடிக்கிறார் அவரது மகன் பிரித்விராஜ். தந்தையை ஜாமினில் வெளியே கொண்டு வர பணம் தேவைப்பட, அதற்காக துபாய் சென்று தானே தங்கம் கடத்தி வரும் பிரித்விராஜ், ஒரு கட்டத்தில் அதையே தன் தொழிலாகவும் மாற்றிக் கொள்கிறார். இந்த தொழில் போட்டி காரணமாக எதிர்பாராமல் நீல் நிதின் முகேஷின் தம்பி கொல்லப்பட வெளிநாட்டிற்கு தப்பி செல்கிறார் பிரித்விராஜ். அவரை மீண்டும் கேரளாவுக்கு வரவழைக்க ஒரு கொடூரமான முடிவை எடுக்கிறார் நீல் நிதின் முகேஷ். அது என்ன முடிவு? பிரித்விராஜ் கேரளா திரும்பினாரா? இவர்கள் இருவருக்கான பகை எப்படி முடிவுக்கு வருகிறது என்பது மீதிக்கதை.
'புலி முருகன்' என்கிற கமர்சியல் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வைசாக், இந்த படத்தில் தங்க கடத்தல் பின்னணியில் உள்ள விஷயங்களை சுவாரசியமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
அப்பாவி, அடப்பாவி என சொல்லும் விதமாக பிரித்விராஜிற்கு இரு முகங்கள். தனது தாத்தா மிகப்பெரிய தாதாவாக இருந்தாலும், அதை விரும்பாத தனது அப்பாவின் பாதையை அதையே பின்பற்றுவதும், ஒரு கட்டத்தில் தந்தையை காப்பாற்ற தனது தாத்தாவின் வழியிலேயே பயணிப்பதும் என அந்த கதாபாத்திர உருமாற்றத்தை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார் பிரித்விராஜ். ஆக் ஷன் காட்சிகளில் வழக்கம்போல பின்னிப் பெடல் எடுக்கிறார். தங்கம் கடத்துவதில் இவர் கையாளும் பாணியும், எதிரிகளை மடக்க இவர் பயன்படுத்தும் யுக்திகளும் படத்தின் விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றன.
மாளவிகா சர்மாவுக்கு, நாயகனை காதலித்து உடனடியாக மனைவியாகி குடும்பத் தலைவியாக மாறும் டிபிக்கல் கதாநாயகி கதாபாத்திரம் சரியாக பொருந்தி இருக்கிறது. திலகன் இல்லாத குறையை சமீப நாட்களாகவே போக்கி வருகிறார் அமைச்சராக நடித்திருக்கும் அவரது மகன் சம்மி திலகன். நீல் நிதின் முகேஷ் வழக்கம் போல தனது டெம்ப்ளேட் வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரித்விராஜின் தாயாக நடித்துள்ள மோகினிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இது நல்ல ரீ என்ட்ரி.
பாசமிகு தந்தையாக ரெஞ்சி பணிக்கர், நட்புக்கரம் நீட்டும் விசுவாசியாக நடிகர் இந்திரன்ஸ், கஸ்டம்ஸ் ஆபீஸராக வரும் அருள்தாஸ், பிரித்விராஜின் நண்பனாக படம் முழுவதும் பயணிக்கும் சஞ்சு சிவராம், பிரித்விராஜின் வழிகாட்டியாக வரும் பெரியவர் சுரேஷ் ஓபராய் என படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைத்துமே அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள். மோகன்லால், சவ்பின் சாஹிர், டொவினோ தாமஸ் ஆகியோர் கிளைமாக்ஸில் கேமியோ கதாபாத்திரங்களில் தோன்றி சர்ப்ரைஸ் கொடுக்கிறார்கள்.
தங்க கடத்தல் பற்றிய படம் என்பதாலோ என்னவோ ஒளிப்பதிவாளர் ஜோமொன் டி. ஜானின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் தங்கத்தில் மின்னுவது போலவே இருக்கிறது. துபாய் சம்பந்தப்பட்ட காட்சிகள், அதிலும் அந்த சப்வே சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. இந்த விறுவிறுப்பான ஆக் ஷன் காட்சிகளுக்கு கூடவே தனது பின்னணி இசை மூலம் பக்கபலமாக பயணித்திருக்கிறார் ஜேக்ஸ் பிஜாய். படத்தொகுப்பாளர் சமன் சாக்கோ சில காட்சிகளில் தாராளமாக கத்தரி போட்டிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
'புலி முருகன்' படத்திற்குப் பிறகு கடந்த பத்து வருடங்களாக ஒரு வெற்றி படம் கொடுக்க தடுமாறி வரும் இயக்குனர் வைசாக், இந்த படத்தில், தான் மீண்டு வருவதற்கான வேலையை கவனமாக செய்திருக்கிறார்.. தங்க கடத்தல் சம்பவங்கள் சூர்யா நடித்த 'அயன்' படத்தை சில சமயம் நினைவூட்டினாலும், ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் போட்டி, அதை ஹீரோ பிரித்விராஜ் எதிர்கொள்ளும் விதம் என திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டி இருக்கிறார் வைசாக். குறிப்பாக, வில்லனின் தம்பியை பிரித்விராஜ் சுத்துப்போடும் விதம் செம ட்விஸ்ட். அதேபோல பிரித்விராஜ் இல்லாத சமயத்தில் அவரது குடும்பத்தை காக்க அவரது குடும்ப செக்யூரிட்டிகள் ஆடும் அந்த ஐந்து நிமிட ருத்ர தாண்டவமும் சிலிர்க்க வைக்கிறது.
ஆரம்பத்தில் படம் கொஞ்சம் மெதுவாக நகர்வது போல தோன்றினாலும், அரை மணி நேரத்திற்கு பிறகு படத்தை சீரான வேகத்தில் டேக் ஆப் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர் வைசாக். இது போன்ற தங்க கடத்தல் படங்கள் என்றாலே பல லாஜிக் மீறல்கள் இருக்கும்; இதிலும் இருக்கிறது. ஜெயிலுக்குள் நடக்கும் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதன் முடிவு சுவாரஸ்யம் என்றாலும், காதில் பூ சுற்றுவது போல இருக்கிறது. இருந்தாலும், ஆக் ஷன் விரும்பிகளுக்கு போர் அடிக்காத ஒரு பொழுதுபோக்கிற்கு இந்த 'கலிபா' உத்தரவாதம் தருகிறது.
கலிபா - தங்க வேட்டை