PUBLISHED ON : ஜூன் 20, 2026 12:31 AM

'பட்ட காலிலேயே படும் என்பது சரியாகத் தான் இருக்கிறது...' என கண்ணீர் வடிக்கிறார், மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், உத்தவ் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி நடக்கிறது. உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்ட சிவசேனாவில், முக்கிய தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, 2022ல், அந்த கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளுடன் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.
இதனால், சிவசேனா கட்சியும், தேர்தல் சின்னமும், அவர் வசம் வந்தன. மஹாராஷ்டிரா துணை முதல்வர் பதவியும் ஷிண்டேவுக்கு கிடைத்தது. இதையடுத்து உத்தவ் தாக்கரே, உத்தவ் - சிவசேனா என்ற பெயரில், தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களிலும் உத்தவ் தாக்கரே தரப்பு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால், கட்சி நிர்வாகிகள் அவர் மீது படிப்படியாக நம்பிக்கை இழந்து வந்தனர்.
இந்நிலையில், உத்தவ் அணியைச் சேர்ந்த ஒன்பது எம்.பி.,க்களில் ஆறு பேர், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு தாவ முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள உத்தவ் தாக்கரே, கட்சியை தன் மகன் ஆதித்ய தாக்கரே வசம் ஒப்படைத்து விட்டு, அரசியலுக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
