PUBLISHED ON : செப் 27, 2025 12:00 AM

'எதிரெதிர் முகாமில் இருந்தாலும், சொந்தத்தை விட்டுக் கொடுக்க மறுக்கிறார் பார்த்தீர்களா...' என, தேசியவாத காங்கிரஸ் - சரத்பவார் பிரிவு எம்.எல்.ஏ.,வும், அந்த கட்சியின் தலைவர் சரத் பவாரின் பேரனுமான ரோஹித் பவார் பற்றி கிண்டல் அடிக்கின்றனர், சக அரசியல்வாதிகள்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தேசிய வாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.
சரத் பவார் தலைமை யிலான தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்து, தன் ஆதரவாளர்களுடன் வெளியேறிய அஜித் பவார், இப்போது அந்த கட்சியை தன் வசப்படுத்தி விட்டார். இவர், சரத் பவாரின் அண்ணன் மகன்.
பழைய கட்சி, சரத் பவார் தலைமையில் செயல்படுகிறது. இதில், சரத் பவாரின் பேரனான ரோஹித் பவார், முக்கிய தலைவராக உள்ளார். அரசியல் ரீதியாக ரோஹித் பவாரும், அஜித் பவாரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிப் பேசுவது வழக்கம்.
இந்நிலையில், அஜித் பவார், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியிடம் அடாவடியாக பேசிய, 'ஆடியோ' சமீபத்தில் வெளியானது. இதற்கு பலரும், அஜித் பவாருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால், ரோஹித் பவாரோ, 'எனக்கு அஜித் பற்றி நன்றாக தெரியும். அவரது பேச்சின் தோரணை கரடு முரடாக இருக்கும். அதை வைத்து, அவரை பலரும் விமர்சிக்கின்றனர். பெண்களை ஒருபோதும் தவறாக பேசமாட்டார்...' என்றார்.
சக அரசியல்வாதிகளோ, 'தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்பதை ரோஹித் நிரூபித்து விட்டார்...' என்கின்றனர்.

