PUBLISHED ON : அக் 21, 2025 12:00 AM

'எத்தனை முறை கூறினாலும், திரும்ப திரும்ப அதே தவறை செய்கிறார்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி, அவரது கட்சியினர் கவலையுடன் பேசுகின்றனர்.
ஏற்கனவே, பிரதமர் மோடியின் ஜாதி பற்றி, ராகுல் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சால், அவரது எம்.பி., பதவியே பறிபோனது. உச்ச நீதிமன்றம் தலையிட்ட தால், மீண்டும் அவருக்கு பதவி கிடைத்தது.
இதே போல, வெளிநாடு செல்லும்போதெல்லாம் பிரதமர் பற்றியும், பா.ஜ., பற்றியும் ராகுல் விமர்சிப் பதும், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தியது . அவரது சர்ச்சைக்குரிய பேச்சுகளால், சில வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில், 'ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு, பிரதமர் மோடி பயப்படுகிறார்...' என, ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்தை சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்திருந்தார்.
ராகுலின் இந்த பதிவுக்கு, வெளிநாடுகளில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. வெளி நாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்கள், 'ராகுல் தன் சொந்த நாட்டின் பிரதமரை முதலில் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்கு இந்தியாவின் தலைமைப் பதவியை ஏற்கும் தகுதி இல்லை...' என, எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த, காங்., கட்சியினர், 'முதலில் உள்நாட்டில் உள்ளவர்கள் தான் ராகுலை விமர்சித்தனர். இப்போது வெளிநாடுகளிலும் விமர்சனம் எழுந்து விட்டது. மொத்தத்தில் மானம் கப்பலேறுகிறது...' என, புலம்புகின்றனர்.

