PUBLISHED ON : ஜூன் 28, 2025 12:00 AM

'எப்போது வேண்டுமானாலும் பீஹார் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற நிலையில், தொடர்ந்து இப்படி பேசினால், எப்படி தேர்தலை நம்பிக்கையுடன் சந்திக்க முடியும்...' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் பற்றி, அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் கவலையுடன் கூறுகின்றனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலிலும், ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்துள்ளன.
எதிர்க்கட்சிகள் தரப்பில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தலுக்கு பா.ஜ.,வும், ஐக்கிய ஜனதா தளமும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.
ஆனால், காங்கிரசின் ராகுலோ, தொடர்ந்து தேர்தல் கமிஷன் மீது குற்றஞ்சாட்டி வருகிறார்.
'கடந்த முறை நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பெரிய அளவில் முறைகேடு அரங்கேறியுள்ளது. பா.ஜ.,வை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, இந்த முறைகேட்டை தேர்தல் கமிஷன் அரங்கேற்றியுள்ளது...' என, குற்றஞ்சாட்டுகிறார்.
பீஹார் காங்கிரஸ் நிர்வாகிகளோ, 'தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்ன வழி என்பதை ஆராயாமல், நடந்து முடிந்த தேர்தலை பற்றி பேசி என்ன பயன்? பீஹார் தேர்தலில் தோல்வி உறுதி என ராகுல் முடிவு செய்து விட்டாரா... அதற்காக இப்போதே காரணத்தை கண்டுபிடித்து விட்டது போல் பேசுகிறாரே...' என, புலம்புகின்றனர்.