PUBLISHED ON : ஜன 10, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
எங்கும் சூடான உணவு
மதிய உணவு கொண்டு செல்வதற்கு ஏற்ற 'பேக்' ஒன்றை ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. இது அமெரிக்காவில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு லேப்டாப் பேக் போல இருக்கும் இதில் உள்ள 'டப்பர்வேரில்' உணவை வைத்தால் 10 நிமிடத்தில் 90 டிகிரி செல்சியஸ், 20 நிமிடத்தில் 130 டிகிரி, அதிகபட்சமாக 250 டிகிரி செல்சியஸ் சூடுபடுத்தலாம். இதை அலைபேசி செயலியில் நிர்ணயிக்கலாம். மே 2024 பிரிட்டனில் விற்பனைக்கு வருகிறது. விலை ரூ.12,500. 'பேக்'கில் பருத்தி, அலுமினிய லேயர் கவர் செய்யப்பட்டிருக்கும்.
தகவல் சுரங்கம்
சிறிய யூனியன் பிரதேசம்
இந்தியாவின் எட்டு யூனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவு. அரபிக்கடலில் அமைந்துள்ளது. இதில் 36 தீவுகள் இருந்தன. ஒன்று கடல்நீரில் மூழ்கி விட்டது. 10 தீவுகளில் மக்கள் வாழ்வதில்லை. விமானம் நிலையம் அகாதி தீவில் உள்ளது. பரப்பளவு அடிப்படையில் நாட்டின் சிறிய யூனியன் இதுதான். பரப்பளவு 32.62 சதுர கி.மீ. தலைநகர் கவரெட்டி. மலையாளம், சமஸ்கிருதத்தில் லட்சத்தீவு என்றால் ஒரு லட்சம் தீவுகள் என அர்த்தம். இங்கு சட்டசபை கிடையாது. ஒரு லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2011 சென்சஸ் படி மக்கள்தொகை 64,473.

