PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்: கர்நாடகாவில், மேகதாது அணையை கட்ட முடியாது என, திட்டவட்டமாக நான் சொல்கிறேன். தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், அவர்கள் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது. அந்த அளவுக்கு, திட்டவட்டமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. அணைகள் கட்ட, பல தடைகளை கடக்க வேண்டும்; ஐந்து குழுக்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த குழுக்கள் இதற்கு அனுமதி தர முடியாது என்று தான் சொல்லும்.
டவுட் தனபாலு: அது சரி... சிலந்தி ஆற்றில் கேரளா தடுப்பணை கட்டியதே... அதுக்கு, எந்த அமைப்புகளிடம் கேரளா ஒப்புதல் வாங்கியது... ஜனவரி மாதமே, தங்களுக்கு அந்த அணை பற்றிய தகவல் தெரிந்தும், தேர்தலுக்காக கமுக்கமா இருந்தது போல, மேகதாது விஷயத்திலும் நடக்காது என்பதை, 'டவுட்' இல்லாம தங்களால் கூற முடியுமா?
காங்., கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ்: பெரும்பான்மைக்கு தேவையான, 272 இடங்களுக்கு மேல், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும். தேர்தல் முடிவு வெளியாகி, இண்டியா கூட்டணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்ட, 48 மணி நேரத்தில் பிரதமர் யார் என்பதை, இண்டியா கூட்டணி தேர்வு செய்து அறிவிக்கும். கூட்டணியில் அதிக இடங்களை பெறும் கட்சியே, தலைமை பொறுப்பேற்க உரிமை கோரும் தகுதி உள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... 'இண்டியா' கூட்டணி ஜெயித்தால், காங்கிரசுக்கு தான் பிரதமர் பதவின்னு சொல்லாம சொல்லிட்டீங்க... இதன் வாயிலாக, பிரதமர் பதவி கனவுல இருக்கிற மம்தா, ஸ்டாலின், அகிலேஷ் போன்றவங்களுக்கு, 'அல்வா' குடுத்துட்டீங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா: இந்தியா -- பாகிஸ்தான் இடையே பேச்சு நடக்க வேண்டும் என்று கூறினால், என்னை, 'பாகிஸ்தானி, காலிஸ்தானி, அமெரிக்க கைக்கூலி' என்று அழைக்கின்றனர். இந்த பிராந்தியத்தில் அமைதி நிலவ, பேச்சு நடத்துவது முக்கியம்.
டவுட் தனபாலு: பேச்சு நடத்த இந்தியா என்றுமே திறந்த மனதுடன் தயாராக உள்ளது... ஆனா, ஒரு கையில் துப்பாக்கியை வச்சுக்கிட்டு, மறுபுறம் பேச்சுக்கு கை குலுக்கும் பாகிஸ்தானின் கடந்த கால வரலாறுகளை நீங்க மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!