PUBLISHED ON : ஜூன் 05, 2024 12:00 AM

தேசியவாத காங்., தலைவர்சரத் பவார்: நிதீஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் ஆதரவு அளிக்கும்படி நான் பேசவில்லை. உத்தர பிரதேசத்தில் பா.ஜ., சிறிதளவே வெற்றி பெற்றுள்ளது. டில்லியில் நடக்கும், 'இண்டியா' கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும்.
டவுட் தனபாலு: நீங்க ஆதரவு கேட்டீங்களோ, இல்லையோ... ஆனா, பா.ஜ., கூட்டணியில இருந்து மக்களிடம் ஓட்டுகளை வாங்கி ஜெயிச்சுட்டு, சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் காங்., கூட்டணிக்கு வந்தாங்கன்னா, ஓட்டளித்த மக்களை அவமதிச்சதா ஆகிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்: பிரதமர் மோடி, தன்னை ஒரு அசாதாரணமான மனிதரை போல் காட்டிக் கொண்டிருந்தார். எனவே, லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று, அவர் பதவி விலக வேண்டும். இதுவே இத்தேர்தல் வாயிலாக கிடைத்த செய்தி.
டவுட் தனபாலு: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி தான், மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிகமா ஜெயிச்சிருக்குது... அப்புறமும் மோடி பதவி விலக வேண்டும் என நீங்கள் கேட்பதில், தனி நபர் மீதான தங்களது வெறுப்பு, 'டவுட்'டே இல்லாம புலப்படுது!
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: மக்கள் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கு பணியாற்றுவது தான் ஒவ்வொரு வேட்பாளர்களின் கடமையும். அந்த வகையில், நானும் எனக்கு விழுந்த ஒவ்வொரு ஓட்டையும் நன்றியுணர்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து, மக்களுக்கு சேவை செய்வேன்.
டவுட் தனபாலு: அது சரி... ஒன்றுக்கு ரெண்டு மாநிலங்களின் கவர்னரா இருந்தும், அதை உதறிட்டு தேர்தல்ல நின்னு தோற்று போயிட்டீங்க... உங்க தியாகத்தையும், துணிச்சலையும் பாராட்டி, மறுபடியும் உங்களுக்கு உயர்ந்த பதவி ஏதாவது தருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
'சினிமாவில் சிகரெட் பிடிப்பதை ஊக்குவிக்க கூடாது' என, தேசிய புகையிலை கட்டுப்பாடு திட்டம் வழியே, 2003ல் விளம்பர தடை மற்றும் ஒழுங்குமுறை சட்டம் உள்ளது. உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில், 53 சதவீதத்திற்கு மேல் புகை பழக்கம் அதிகரிக்க, திரைப்படமே காரணம் எனக் கூறியுள்ளது. எதிர்கால சந்ததியினரின் உயிரை காக்க, அனைத்து நடிகர் -- நடிகையர், திரைப்படத் துறையினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புகை மட்டுமா... கொலை, கொள்ளைகளை கூட, வழக்கில் சிக்காம எப்படி செய்யலாம்னு இன்றைய சினிமாக்கள் சொல்லி தருவது இவருக்கு தெரியலையா?