PUBLISHED ON : பிப் 06, 2024 12:00 AM

-மஹாராஷ்டிராவில் செயல்படும், சிவசேனா உத்தவ் அணி தலைவர் உத்தவ் தாக்கரே: மஹாராஷ்டிரா பா.ஜ., --மற்றும் சிவசேனா கூட்டணி அரசில், தற்போது கோஷ்டி மோதல் துவங்கி உள்ளது. ஒருவரை ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுடுகின்றனர். பிற கட்சிகளை உடைத்து, அதன் தலைவர்களை தங்களுடன் சேர்ப்பதால் பா.ஜ., பலவீனமடைவதை பிரதமர் மோடி உணர வேண்டும்.
டவுட் தனபாலு: அந்த மாநில போலீஸ் நிலையத்தில், சிவசேனா நிர்வாகியை பா.ஜ., - எம்.எல்.ஏ., துப்பாக்கியால் சுட்டது, தனிப்பட்ட நிலத்தகராறுல... அதை, நீங்க ஒட்டுமொத்த கூட்டணியின் மோதலாக்க பார்ப்பது, பக்கா அரசியல் என்பதில், 'டவுட்'டே இல்லை!
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட், துணைத் தலைவர் வேல்முருகன், பொருளாளர் கண்ணன்: 'ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்' என்பது உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், தற்போது மீண்டும் லோக்சபா தேர்தலுக்கான வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கை தயாரிக்க தி.மு.க., கருத்து கேட்டுள்ளது. இது, ஆசிரியர்,அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டவுட் தனபாலு: தேர்தல் வர்றதும், அதுக்காக வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கை தயாரிக்கிறதும், அதை நம்பி மக்கள் ஓட்டு போடுறதும், அதன்பின் ஏமாந்து நிற்கிறதும், இன்று, நேற்றா நடக்குது... 'வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகள், அடுத்து தேர்தல் அறிக்கை வெளியிடக் கூடாது' என தடை போட்டால், இந்தியாவில் எந்த கட்சியும் தேறாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: தீய சக்தி தி.மு.க., வுடன் நாங்கள் எப்படி பயணிக்க முடியாதோ, அதுபோல துரோக சக்தியான பழனிசாமியுடனும் நானோ, அ.ம.மு.க., தொண்டர்களோ பயணிக்க மாட்டார்கள். எக்காலத்திலும் பழனிசாமியுடன் இணைந்து செயல்பட மாட்டோம். துரோகத்தினாலேயே அரசியலில் இருந்து வீழ்வார் பழனிசாமி.
டவுட் தனபாலு: இப்ப நீங்களும், பன்னீர்செல்வமும் பா.ஜ.,வுடன் அணி சேர காய் நகர்த்திட்டு இருக்கீங்க... கடைசி நேரத்துல, பா.ஜ., அணியில பழனிசாமியும் சேர்ந்துட்டா, அப்ப உங்க நிலைப்பாடு என்னவாகும் என்ற, 'டவுட்' வருதே!