PUBLISHED ON : மார் 01, 2024 12:00 AM

திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்: நான், பா.ஜ., வில் சேர இருப்பதாக சொன்னவனை செருப்பால் அடிப்பேன். இனிமேல் சீமான் போல பேசுவது என்று நானும் முடிவு செய்து விட்டேன். இந்த மாதிரி கேள்வி கேட்டால், என்னுடைய பதில் இப்படித்தான் இருக்கும்.
டவுட் தனபாலு: அடடா... மறுபடியும் திருச்சி தொகுதிக்கு குறி வச்சிருக்கிற உங்களை இப்படி, 'டென்ஷன்' ஆக்கலாமா...? ஆரம்பத்துல அ.தி.முக., - தனி கட்சி - அ.தி.மு.க., - தனி கட்சி - பா.ஜ., - காங்கிரஸ்னு பரம பதம் ஆடிட்டே இருந்தவர் என்பதாலும், ரொம்ப காலமா கட்சி மாறாமலே இருப்பதாலும், உங்க மேல, 'டவுட்' வந்துடுச்சோ?
துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி: 'தி.மு.க., என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இருக்காது' என்று கூறியவர்கள் பல பேரை நான் பார்த்திருக்கிறேன். அவ்வாறு கூறிய பலரை, இப்போது காணவில்லை. ஆனால், தி.மு.க., தமிழகத்தில் தொடர்ந்து பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது.
டவுட் தனபாலு: 'தி.மு.க.,வே இனி இருக்காது... நாங்க தான் ஒரிஜினல் தி.மு.க.,வாக்கும்' என, 1994ல் முழங்கியவர் வைகோ தான்... இப்ப, ஒரே ஒரு சீட்டுக்காக உங்க கட்சி வாசல்ல காத்திருக்கார்... அவரை தான், நாசுக்கா குத்தி காட்டுறீங்களோ என்ற, 'டவுட்' வருதே!
அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு செயலர் ராஜ்சத்யன்: கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., - எம்.பி.,க்களும், கூட்டணி கட்சி எம்.பி.,க்களும் தமிழகத்திற்கு தேவையான எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. உதாரணமாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.பி., வெங்கடேசன் உயர் கோபுர விளக்குகள், நிழற்குடைகள் அமைத்து கொடுத்ததை சாதனையாக சொல்லி வருகிறார்.
டவுட் தனபாலு: 'லோக்சபா தேர்தல்ல, 350க்கு மேலான சீட்களை பிடிச்சு, அடுத்தும், மத்தியில மோடி ஆட்சி தான்'னு பெரும்பாலான கருத்து கணிப்புகள் சொல்லிடுச்சு... அதனால, தி.மு.க.,வோ அல்லது உங்க கட்சியினரோ இங்க ஜெயிச்சு டில்லிக்கு போனாலும் பெருசா சாதிக்க முடியுமா என்பது, 'டவுட்'தான்!

