PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பதை போல், கர்நாடகாவை சேர்ந்தவர்கள், குப்பையை கொண்டு வந்து தமிழக ஆற்றில் கொட்டுகின்றனர். காங்கேயநல்லுார் பாலாற்றில் குப்பை கொட்டு வதால், தண்ணீரே கெட்டுப் போய் விட்டது. வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றிலும் கழிவு கலக்கிறது; காவிரியிலும் கழிவு கலக்கிறது. இப்படிப்பட்ட மோசமான ஒரு நிலைமையை எப்படி எதிர்கொள்வது என புரியவில்லை.
டவுட் தனபாலு: முதல்வரை விடவும் சீனியர் அரசியல்வாதி, பலமுறை அமைச்சர் பதவி வகித்த நீங்களே, இப்படி புலம்பினா என்ன அர்த்தம்... கர்நாடகாவுக்கு எதிராக கறார் நடவடிக்கை எடுக்க முடியலைன்னா, துடிப்பாக செயல்படக்கூடிய இளைஞர்கள் யாரிடமாவது உங்க துறையை கைமாத்தி விட்டுட்டு, ஓய்வு எடுத்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
பத்திரிகை செய்தி: கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பிடித்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, அடுத்து வரும் ராஜ்யசபா தேர்தலில் கமல்ஹாசனுக்கு எம்.பி., பதவி தருவதாக பேசப்பட்டது. தற்போது தி.மு.க., சார்பிலேயே கமலை ராஜ்யசபா எம்.பி., யாக்க, முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: அது சரி... இப்படி தி.மு.க.,வின் சார்பு அணியாக மக்கள் நீதி மய்யம் கட்சி செயல்படுவதை விட, பேசாம அந்த கட்சியிலயே இணைஞ்சுடலாம்... அப்புறமா தி.மு.க.,வின் பிரதிநிதியாகவே, கமல் ராஜ்யசபாவுக்குள்ள போயிட்டா எந்த விமர்சனத்துக்கும் இடமிருக்காது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: கொரோனா தொற்று, கருணாநிதி நினைவு நாள், தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாட்டு பயணம் உள்ளிட்ட பல காரணங்களால், ஏற்கனவே நடந்த, 'நிடி ஆயோக்' கூட்டங்களில் முதல்வரால் கலந்துகொள்ள முடியவில்லை. ஆனால், இந்த முறை வாய்ப்பு இருந்தது; அதனால், முதல்வர் கூட்டத்தில் பங்கேற்றார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கான கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டது. அதை வலியுறுத்திப் பெறவும் திட்டமிட்டு, முதல்வர் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.
டவுட் தனபாலு: தமிழகத்துக்கு கல்வி உதவித்தொகை தராத மத்திய அரசுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., அரசு வழக்கே போட்டிருக்கு... ஒரு பக்கம் வழக்கு போட்டுட்டு, மறுபக்கம் அந்த நிதியை கேட்டுப் பெறவே முதல்வர் டில்லி போனார்னு சொல்றதை, 'டவுட்' இல்லாம எப்படி நம்புறது?